சில தனியார் மருத்துவமனைகளில் பிரேதத்துக்கு வைத்தியம் பார்த்து ‘பில்’ போடுவார்கள். அரசு மருத்துவமனை மார்ச்சுவரிகளில் பிரேதப் பரிசோதனை முடிந்த பிரேதத்தை, உரியவர்களிடம் ஒப்படைக்கவே ஈவு இரக்கம் இல்லாமல் பணம் பிடுங்குவார்கள். ஆனால், கோவை அரசு மருத்துவமனை மார்ச்சுவரியில் அப்படிக் காசு பிடுங்கும் சுவடையே பார்க்க முடியவில்லை. சிலர் வலியச் சென்று, “இத வெச்சுக்குங்க” என்றாலும் மறுத்து ஓட்டம் பிடிக்கிறார்கள் ஊழியர்கள். காரணம், அண்மையில் பரவிய அந்த வாட்ஸ் - அப் வீடியோ. தற்காலிகமாகத் தொடரும் இந்த ‘லஞ்ச பயம்’ நிரந்தரமாக வேண்டும் என்கிறார்கள் கோவை வாசிகள்!
அப்படி என்ன இருக்கிறது அந்த வீடியோவில்? மருத்துவமனையின் மார்ச்சுவரி ஊழியர் ஒருவரிடம் நான்கைந்து பேர் வாக்குவாதம் செய்கின்றனர். அதில் ஒருவர், “பிணத்தை வச்சுட்டு பணம் கேட்கிறியே... இந்தா நீ கேட்ட பிச்சைக் காசு!” என்கிறார். பதிலுக்கு அந்த ஊழியர், “யாருய்யா பிச்சைக்காரன்... யாருக்கு வேணும் உன் பணம்!” என எகிறுகிறார். இறுதியாக வேறொரு நபரைக் கைகாட்டி, அவரிடமே பணத்தைக் கொடுக்கச் சொல்லிவிட்டு நகர்கிறார். ஆனாலும், வாக்குவாதம் செய்யும் நபர்கள் ஊழியரிடம் வலுக்கட்டாயமாகப் பணத்தைத் திணிக்கிறார்கள். இப்படியாக முடிகிறது அந்த வீடியோ. இது வெளியானதைத் தொடர்ந்து பரமசிவம் என்ற அந்த ஊழியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பாகத் கோவை மருத்துவமனையில் சிலரிடம் பேசினோம். “கோவை அரசு மருத்துவமனைக்குப் பக்கத்து மாவட்டங்களிலிருந்தும் சிகிச்சைக்கு வருகிறார்கள். நுழைவுச் சீட்டு போடுவது தொடங்கி, உள்நோயாளிகளாக அனுமதிக்கப்படுவது வரை எல்லாவற்றிலுமே லஞ்சம் விளையாடுகிறது. ஒரு வார்டிலிருந்து இன்னொரு வார்டுக்கு ஸ்ட்ரெச்சரில் நோயாளியைக் கொண்டு செல்லவே இருநூறு ரூபாய் வரை தர வேண்டியிருக்கிறது.
தவிர, ஸ்ட்ரெச்சருக்காக மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டும். உள்நோயாளிக்குக் கட்டில், படுக்கை விரிப்பு உள்ளிட்டவற்றைப் பெறுவதற்கும் காசுதான். பிரசவ வார்டுகளில், பிறந்த குழந்தையைக் காட்டுவதற்கும் லஞ்சம்தான். இங்கே ஊழியர் பற்றாக்குறை, உபகரணங்கள் பற்றாக்குறை நிலவுவதால், லஞ்சத்தின் ‘மதிப்பு’ எகிறிக்கொண்டே இருக்கிறது.