தைராய்டு தொல்லை!


இன்றைய வாழ்க்கைமுறையில், காலையில் எழுந்து பல் துலக்கியதும், முதல் வேலையாக ‘தைராக்ஸின்’ மாத்திரையை விழுங்கும் கூட்டம் அதிகரித்துவருகிறது. காரணம், ‘குறை தைராய்டு’ கோளாறு. நாட்டைப் பீடித்துள்ள தொற்றா நோய்க் கூட்டத்துக்குப் புதிய வரவு இது. இதற்கான மருந்துதான் ‘தைராக்ஸின்’.

முன்கழுத்தில், தோலுக்கு அடியில், ஒரு வண்ணத்துப்பூச்சி வடிவத்தில் இருக்கிறது தைராய்டு. இது பிறக்கும் குழந்தையில் தொடங்கி முதியோர் வரை எல்லோருக்கும் இருக்கிற ஒரு ஹார்மோன் சுரப்பி. இதில் ஐந்துக்கும் மேற்பட்ட நோய்கள் ஆர்ப்பாட்டமில்லாமல் வருகின்றன. அவற்றில் ‘குறை தைராய்டு’ முன் வரிசையில் நிற்கிறது. முன்பெல்லாம் இது முதியோருக்கே அதிகம் வந்ததாக மருத்துவத் தரவுகள் கூறுகின்றன. இப்போதோ இது இளம் வயது பெண்களையே அதிகம் குறிவைக்கிறது.

இதற்குக் காரணம் மாறிவரும் உணவுப் பழக்கம், பெருகிவரும் அந்நிய உணவு மோகம், உடல் உழைப்பில்லாத வாழ்க்கை, உறக்கம் தொலைத்த இரவுகள், உடனிருந்து நலம் பறிக்கும் உளச்சோர்வு என இந்தியா உள்ளிட்ட வாழ்வியலில் நவீனம் கண்டுள்ள நாடுகள் புலம்புகின்றன. இவை மட்டுமா? இன்னும் இருக்கிறது என்கிறது ‘லான்செட்’ எனும் மருத்துவ இதழ். அதை அப்புறம் சொல்கிறேன். அதற்கு முன்னால் சொர்ணாவின் ‘புராண’த்தைச் சொல்லிவிடுகிறேன்.

சொர்ணாவுக்கு அந்நிய நாடுகளுக்கு நூல் ஏற்றுமதி செய்யும் நிறுவனத்தில் வேலை. இன்னும் திருமணமாகவில்லை. சுயமாகச் சமைத்துச் சாப்பிடும் அப்பார்ட்மென்ட் வாழ்க்கை. முக்கால்வாசி நாட்களில் இருவேளை உணவு நூடுல்ஸ் மட்டுமே. மதியச் சாப்பாடு கேன்டீனில்! அதையும் நேரத்தோடு சாப்பிட முடியாது. அவருடைய வேலை நெருக்கடி அப்படி பகல் முழுவதும் அவர் பிஸியாகவே இருப்பார். இரவிலும் தூக்கத்தைத் தள்ளிவிட்டு, மடிக்கணினியில் கணக்குப் பார்த்துக்கொண்டிருப்பார். பல்லிடுக்கில் பாக்கு சிக்கிக்கொண்டால் ஒரு சங்கடம் படுத்துமே…. அதுமாதிரிதான், ‘கையில் இருக்கும் ஆர்டர்களுக்குப் பதில் சொல்லியாக வேண்டுமே’ என்ற அழுத்தம் அவர் மனசுக்குள் எந்த நேரமும் எகிறிக்கொண்டிருக்கும்.

x