ஆறு மாதங்களுக்கு முன் மூடப்பட்ட திருநங்கைகளுக்கான காப்பகத்தை மீண்டும் தொடங்கவிருக்கிறது சென்னை மாநகராட்சி.
சென்னையின் முக்கியச் சாலைகளில் இரவு நேரங்களில் திருநங்கைகள் பாலியல் தொழிலில் ஈடுபடுகிறார்கள் என்பது அவ்வப்போது செய்திகளில் பரபரப்பாகப் பேசப்படுகிறது. ஆனால், இந்தப் பிரச்சினைக்கு என்ன காரணம் என்பதை நாம் பார்ப்பதில்லை. நமக்கு பிரீத்திகாக்கள், யாஷினிகள் எனக் கலைத் துறையில் சாதித்துவரும் ஒரு சில திருநங்கைகளை மட்டும்தான் தெரிகிறது. ஆனால், நாம் அறியாத பல திருநங்கைகளின் வாழ்க்கை மிக மோசமான நிலையில்தான் இருக்கிறது. இவர்கள் பெரும்பாலும் குடும்பங்களால் புறக்கணிக்கப்படுகின்றனர். எப்படிப்பட்ட திறமை இருந்தாலும் பலர் இவர்களை வேலைக்கு சேர்த்துக்கொள்ளத் தயங்குகின்றனர். அப்படியே வேலை கிடைத்தாலும், பணியிடங்களில் இவர்களுக்கு நிகழும் பாலியல் துன்புறுத்தல்களும் அதிகம்.
சென்னை போன்ற பெருநகரங்களில் திருநங்கைகளின் தலையாய பிரச்சினையாக இருப்பவை வேலையும் தங்குமிடமும்தான். இதை உணர்ந்த மாநகராட்சி, கடந்த ஆண்டு திருநங்கைகளுக்கான காப்பகம் ஒன்றை சேத்துப்பட்டில் தொடங்கியது. இங்கே திருநங்கைகள் தற்காலிகமாகத் தங்கிக்கொள்ளலாம். அவர்களுக்குக் குறிப்பிட்ட சில தொழில் பயிற்சிகளும் வழங்கப்படும். வேலை கிடைக்கும் வரை அவர்கள் காப்பகத்தில் இருக்கலாம். சென்னை மட்டுமில்லாது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த திருநங்கைகள் இந்தக் காப்பகத்தில் தங்கியிருந்தனர்.
இதைப் பராமரிக்கும் பொறுப்பு அரசு சாரா நிறுவனம் ஒன்றிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆறு மாதங்களுக்கு முன் திடீரென்று இந்தக் காப்பகம் மூடப்பட்டது. சம்பந்தப்பட்ட நிறுவனம் இதை முறையாகப் பராமரிக்கவில்லை என்று காரணம் சொன்னது மாநகராட்சி. காப்பகத்தில் தங்குபவர்களுக்கான மூன்று வேளை உணவு, பணியாளர்கள் சம்பளம், இதர பராமரிப்புச் செலவுகள் ஆகியவற்றுக்கு மாநகராட்சியிடமிருந்து பணம் வரவில்லை என்று அந்த நிறுவனம் குற்றம் சாட்டியது. இடையில், காப்பகத்தில் இருந்த திருநங்கை ஒருவர் தற்கொலை செய்துகொண்டதால் மற்றவர்கள் இங்கு வரத்தயங்கினர்.