தேவையில்லாத அக்கப்போரெல்லாம் இதுல வராது!- வானொலியைக் காதலிக்கும் ‘ரேடியோ ராஜேந்திரன்’


ஒருகாலத்தில் வானொலிக்கு இருந்த மவுசு என்னவென்று இப்போது வயது நாற்பதைக் கடந்தவர்களுக்குத்தான் தெரியும். அலைபேசியும், இணையமும் நம்மை அடிமைப்படுத்தாத அந்தக் காலத்தில் சாமானியர்களின் ஒரே பொழுதுபோக்குச் சாதனம் வானொலிப்பெட்டிதான். பரபரப்பான இன்றைய 4 ஜி உலகம், கிட்டத்தட்ட வானொலியை மறந்துவிட்ட நிலையிலும் நாற்ப்பதாண்டு காலமாக வானொலியைக் காதலிக்கிறார் விவசாயி ராஜேந்திரன்!

அரியலூர் மாவட்டம் வஞ்சினபுரத்தில் இறங்கி ராஜேந்திரன் என்றால் யாருக்கும் தெரியவில்லை. ‘ரேடியோ சரவணன்’ என்று செல்லப் பெயரைச் சொன்னால்தான் தெரிகிறது. வசதியான அந்த மாடிவீட்டில் நாலா திசையிலும் பழுதடைந்த வானொலிப் பெட்டியின் பாகங்கள் விரவிக்கிடக்கின்றன. பிள்ளைகள் வெளிநாட்டில் இருப்பதன் அடையாளமாக வீட்டு ஹாலில் எல்.ஈ.டி டிவி ஒன்று மாட்டப்பட்டு தூசு படிந்திருக்கிறது. அது ராஜேந்திரனின் மகன்கள் வந்தால் பார்ப்பதற்காகவாம்!

தொழுவத்தில் மாட்டுக்கு வைக்கோல் போட்டுக்கொண்டிருக்கிறார் ராஜேந்திரன். பக்கத்திலிருந்த வானொலிப் பெட்டியில், ‘வாழ நினைத்தால் வாழலாம்... வழியா இல்லை பூமியில்...’ என்று பி.சுசிலா தன்னம்பிக்கை ஊட்டிக்கொண்டிக்கிறார். அதை ரசித்துக்கொண்டே வேலையில் கருத்தாய் இருக்கிறார் ராஜேந்திரன். இப்படித்தான் மாடு ஓட்டிச் சென்றாலும், வரப்பு வெட்டினாலும், களை பறித்தாலும் அங்கெல்லாம் ராஜேந்திரனுக்கு உற்ற துணையாக இந்த வானொலிப்பெட்டி பாடிக்கொண்டும் பேசிக்கொண்டும் இருக்கும். வானொலி ஓசைக்கிடையேதான் இவரது உழைப்பும் கரைகிறது.

காலை 5 மணிக்கு எழுந்ததுமே வானொலிப் பெட்டியை முடுக்கிவிடுவார் ராஜேந்திரன். அதுதொடங்கி இரவு ஒன்பதரை மணி வரைக்கும் அவர்கூடவே பயணிக்கிறது வானொலி. `பாய்ஸ்’ படத்தில், எந்த நாளில் எத்தனை மணிக்கு எந்தக் கோயிலில் என்ன பிரசாதம் தருவார்கள் என்று டேட்டா சேகரித்து வைத்திருப்பார் நடிகர் செந்தில். அதுபோல எந்த நேரத்தில் எந்த நாட்டு வானொலியில் தமிழ் ஒலிபரப்பாகும் என்ற விவரத்தையெல்லாம் விரல் நுனியில் வைத்திருக்கிறார் ராஜேந்திரன். அதையெல்லாம் அவர் சொல்லச் சொல்ல, ‘இத்தனை நாடுகளில் தமிழ் சேவை ஒலிபரப்பு இருக்கிறதா?’ என்று நமக்கே ஆச்சரியம் வருகிறது.

x