ஸ்பானிஷ் ஃப்ளூ- 10 கோடி பேரை பலிகொண்ட கொள்ளைநோயின் 100 ஆண்டுகள்!


பல வகையிலும் முக்கியத்துவம் வாய்ந்தது 2018-ம் ஆண்டு. பெண்கள் வாக்குரிமை பெற்று 100 ஆண்டுகள்; முதல் உலகப் போர் முடிவுற்று 100 ஆண்டுகள் என்று சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால், உலக வரலாற்றில் மிக மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்திய ஒரு நிகழ்வின் நூற்றாண்டும் இந்த ஆண்டுதான் என்பதை நம்மில் பெரும்பாலானோர் மறந்துபோய்விட்டோம்.

1918-ல் உலகையே ஆட்டிப்படைத்த ஸ்பானிஷ் ஃப்ளூவுக்கு இந்த ஆண்டு நூற்றாண்டு! 5 கோடியிலிருந்து 10 கோடி பேர் வரை ஸ்பானிஷ் ஃப்ளூவால் உயிரிழந்திருக்கலாம் என்று கணக்கிடப்படுகிறது. நூறு ஆண்டுகளுக்கு முந்தைய ஒட்டுமொத்த உலக மக்கள்தொகையில் இது 5% என்றால், யோசித்துப் பாருங்கள், எவ்வளவு பெரிய பாதிப்பு என்று.

வரலாற்றில் எந்தக் கொள்ளைநோயை விடவும் 25 மடங்கு அதிக மக்களை பலிகொண்ட கொள்ளைநோய் ஸ்பானிஷ் ஃப்ளூ. இரண்டு உலகப்போர்களிலும் ஏற்பட்ட உயிரிழப்பை ஒன்றாக வைத்துப் பார்த்தாலும், ஸ்பானிஷ் ஃப்ளூவால் இறந்தவர்களின் எண்ணிக்கைதான் அதிகம். ஹிட்லரையும் ஹிரோஷிமாவையும்விட உலக மக்கள்தொகை எண்ணிக்கையில் பெரும் மாற்றம் ஏற்படுத்திய துயர நிகழ்வு இது.

முதல் உலகப் போரின் போக்கையே மாற்றிய சம்பவம் இது (தங்கள் தோல்விக்கு ஸ்பானிஷ் ஃப்ளூதான் காரணம் என்று ஜெர்மானியர்கள் நினைத்தார்கள்). இந்தத் துயர நிகழ்வை எதிர்கொள்ளத் தெரியாத அதிகாரிகளின் இயலாமை காரணமாக, சுவிட்சர்லாந்தில் கிட்டத்தட்ட உள்நாட்டுப் போரே ஏற்படும் அளவுக்கு நிலைமை மோசமானது. பிரிட்டிஷ் இந்தியாவில் இந்தக் கொள்ளைநோயை அரசு சரியாக எதிர்கொள்ளாதது சுதந்திரப் போராட்டத்தின் வேகத்தை மேலும் முடுக்கிவிட்டது. பிரிட்டனில் பொதுச் சுகாதாரம் பற்றிய விவாதத்துக்குத் தூண்டி அதற்கு 30 ஆண்டுகளுக்குப் பிறகு ‘தேசிய மருத்துவ சேவை’ திட்டம் வருவதற்கு ஸ்பானிஷ் ஃப்ளூவே வழிவகுத்தது.

x