காவிரிப் பிரச்சினை... தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு... என, கடந்த ஆண்டு ‘நீட்’ தேர்வுக்காகத் தற்கொலை செய்துகொண்ட அனிதாவை மறந்துவிட இந்தச் சமூகத்துக்கு ஆயிரம் காரணங்கள் இருக்கின்றன. யாரையும் குறை சொல்வதற்கில்லை… அவரவருக்கு ஆயிரம் பிரச்சினைகள். சரி, அனிதாவின் குடும்பம் எப்படி இருக்கிறது? அதுவும் அப்படியேதான் இருக்கிறது. அதே பழைய வீடுதான். வறுமைச் சூழல் மறையவில்லை. ஆனாலும், அனிதாவுக்காகத் திரண்ட நிதியைக் கொண்டு சுற்றுவட்டார கிராமத்துக் குழந்தைகளின் படிப்புக்காக உதவும் வகையில் நூலகத்தை உருவாக்கி வருகின்றனர் அனிதாவின் குடும்பத்தினர்!
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகேயுள்ள குழுமூர்தான் அனிதாவின் சொந்த ஊர். அனிதாவின் மறைவை அடுத்து தமிழக அரசும் திமுக உள்ளிட்ட சில கட்சிகளும், அமைப்புகளும், நடிகர்களும் அவரது குடும்பத்துக்கு நிதி உதவி அளித்தனர். இத்தனையும் கடந்து ஓராண்டாகிவிட்ட நிலையில், கடந்த வாரம் அனிதாவின் வீட்டுக்கு நேரில் சென்றோம்.. அனிதா உயிருடன் இருந்தபோது அவரது வீடு எப்படி இருந்ததோ, இப்போதும் அப்படியேதான் இருக்கிறது. கல் அடுப்பில் உலை கொதிக்கிறது. மரபெஞ்சில் அனிதாவின் தாத்தா சோர்ந்து படுத்திருக்கிறார். பிளாஸ்டிக் நாற்காலிகள் நான்கு மட்டுமே அங்கு புதிதாகத் தெரிகிறது. வராண்டாவில் மேஜை மீது வைக்கப்பட்ட அனிதாவின் இரண்டு படங்களுக்கு சந்தன மாலை அணிவிக்கப்பட்டிருக்கிறது. அதன் முன்பாக விளக்கு எரிந்துகொண்டிருக்க, பற்றவைத்த ஊதுவத்தி மெல்ல கரைந்து கொண்டிருந்தது.
“அனிதாவுக்கு ஏழு வயசு இருக்கறப்ப அவங்கம்மா ஆனந்தம் உடம்புக்கு சுகமில்லாம செத்துட்டா. அதிலிருந்து அவளையும் அண்ணனுவ நாலு பேரையும் நாந்தான் வளக்குறேன். எல்லோர விடவும் இவ என்கிட்ட ரொம்ப எழைவா. அன்னிக்கி, ‘நான் வீட்ட பாத்துக்குறன், நீ வேலைக்குப்போ...’ன்னு அவ சொன்னதால வேலைக்குப் போயிட்டேன். சம்முகமும், மணியும் (அனிதாவின் தந்தை மற்றும் மூத்த சகோதரர்) கொல்லைல வேல இருக்குன்னு போயிட்டாங்க. மூத்தவனுக்கு கீரை புடிக்கும்னு அதவாங்கி சமைச்சு வச்சிட்டு, நடுவனுக்கு உடம்புக்கு முடியலன்னு வெண்ணித் தண்ணி வச்சுருக்கா. அதுக்குப்பின்ன என்ன நினைச்சாளோ, பாவி சிறுக்கி இப்படிப் பண்ணிப்புட்டா...” என்று அனிதாவின் இறுதி நாளைச் சொல்லி அழுகிறார் அவரது பாட்டியான பெரியம்மா.
அனிதாவின் மூத்த சகோதரர் மணிரத்தினம் சென்னையில் தங்கி ஐ.ஏ.எஸ். பயிற்சி வகுப்புக்குச் செல்கிறார். அதற்கான செலவை சங்கர் ஐ.ஏ.எஸ். அகாடமி ஏற்றுக் கொண்டிருக்கிறது. மணிரத்தினத்துக்கு அடுத்தவரான சதீஷ் குமாருக்கு அரசு அறிவித்தபடி அரசு வேலை அளிக்கப்பட்டிருக்கிறது. அவர் சென்னை யில் சித்த மருத்துவத் துறையில் உதவியாளராக இருக்கிறார். பாண்டியனும், அருண்குமாரும் பொறியியல் படிக்கிறார்கள். தந்தை சண்முகம், மகள் இறந்ததிலிருந்து வேலைக்குச் செல்வதில்லை. அதேசமயம், அனிதாவின் நோக்கத்துக்காக உழைப்பதிலிருந்து பின்வாங்கிவிடவில்லை.