ஜெயலலிதாவின் தேர்தல் வாக்குறுதியை மறந்து, மூடப்பட்ட மதுக்கடைகளை திறப்பதில் கண்ணும் கருத்துமாய் இருக்கிறது தமிழக அரசு. அதனால்தான் சளைக்காமல் மேல்முறையீடு செய்துகொண்டே இருக்கிறார்கள்!
கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது, “அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், மதுவிலக்கைப் படிப்படியாக அமல்படுத்துவோம்” என்று ஜெயலலிதா வாக்குறுதி அளித்தார். அதன்படியே, ஆட்சிக்கு வந்ததும் ஜெயலலிதா முதலில் 500 கடைகளை மூட உத்தரவிட்டார். அப்போது வருவாய் குறைவாக உள்ள, கோயில், பள்ளிகளுக்கு அருகில் இருப்பதாகப் பொதுமக்கள் புகார் தெரிவித்த கடைகள் தேடிப்பிடித்து மூடப்பட்டன. இதேபோல் எடப்பாடி பழனிசாமி முதல்வராக வந்தபிறகு, ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரும் இதேபோல வருவாய் குறைவாக உள்ள 500 கடைகளைத் தேடிப்பிடித்து மூடினார்.
இந்தச் சூழலில்தான் தேசிய - மாநில நெடுஞ்சாலைகளை ஒட்டி 500 மீட்டர் தொலைவுக்குள் அமைந்துள்ள மதுக்கடைகளை அகற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவு தமிழக அரசுக்குப் பேரிடியாக இருந்தது. இந்தத் தீர்ப்பினால் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் மூட வேண்டிய நிலை ஏற்பட்டது. நெடுஞ்சாலையிலிருந்து 500 மீட்டர் தொலைவுக்கு அப்பால்தான் கடைகள் இருக்க வேண்டுமெனில், ஊருக்குள்தான் கடை திறக்க வேண்டியிருக்கும். ஆனால், அங்கும் பள்ளிகள், கோயில்கள் அருகில் திறக்க முடியாது என்பதால் என்ன செய்வதென்று தெரியாமல் விழித்த தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. இதையடுத்து, தேசிய - மாநில நெடுஞ்சாலைகளை நகராட்சி, உள்ளாட்சி சாலைகளாக வகைமாற்றம் செய்து கடைகளைத் திறந்துகொள்ளலாம் எனக் கடந்த ஆண்டு கட்டுப்பாட்டை தளர்த்தி அனுமதி வழங்கியது உச்ச நீதிமன்றம்.
அனுமதி கிடைத்ததுமே, ஏற்கெனவே மூடப்பட்ட 1,700 கடைகளை உடனடியாகத் திறந்தது தமிழக அரசு. ஆனால், அவை சாலைகளை வகைமாற்றம் செய்யாமல் திறக்கப் பட்டுள்ளதாக பாமக வழக்கறிஞர் பாலு உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் அந்த 1,700 கடைகளையும் மூட உத்தரவிட்டது. மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த தமிழக அரசு, கூடவே மூடப்பட்ட கடைகள் அமைந்துள்ள சாலைகளின் விவரங்களையும் சமர்ப்பித்தது.