பெயின்ட் அடிக்கும் போராட்டம்!


மதுரவாயல்-சென்னை துறைமுகம் இடையிலான பறக்கும் சாலைத் திட்டம் கடந்த ஏழு ஆண்டுகளாகத் தடைபட்டு நிற்கிறது. அவ்வப்போது மத்திய அரசாலும் மாநில அரசாலும் தூசு தட்டப்பட்டு மீண்டும் கிடப்பில் போடப்பட்டுவிடுகிறது இந்தத் திட்டம். இதைக் கண்டிக்கும் விதமாக அண்மையில் மதுரவாயலில் வாழும் மக்கள் நூதன முறையில் போராடினார்கள். பாலத்தின் தூண்களுக்காகச் சாலையின் நடுவில் நடப்பட்ட இரும்புக் கம்பிகள் துருப்பிடித்துப்போயுள்ளன. இந்தக் கம்பிகளால் அங்கு பயணிப்பவர்களுக்கு அதிக ஆபத்து என்பதை உணர்த்தும் விதமாக அவற்றுக்கு பெயின்ட் அடித்துப் போராடத் தொடங்கினார்கள். ஆனால், காவல்துறையினர் இந்தப் போராட்டத்தைக் கலைத்தனர்.

அன்பான சாரும் அன்பளிப்பு காரும்

நாகப்பட்டினம் மாவட்டம் ஆயக்காரன்புலம் நடேசனார் அரசு மேல்நிலைப் பள்ளியின் அறிவியல் ஆசிரியர் ஆர்.ஆனந்தராஜ், கடந்த வாரம் பணி ஓய்வுபெற்றார். அப்போது அவருக்கு ரூ. 9 லட்சம் மதிப்பிலான காரையும், ஐந்து சவரன் தங்க நகையையும் அன்பின் அடையாளமாகத் தந்து, தங்களது நன்றியுணர்வை வெளிப்படுத்தியிருக்கிறார்கள் அவரிடம் பயின்ற மாணவர்கள். இப்பள்ளியில் தற்போது பணியாற்றும் 45 ஆசிரியர்களில் 15 ஆசிரியர்கள் ஆனந்தராஜிடம் பயின்றவர்கள். இவரிடம் படித்த இன்னும் பலர் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள் என உயர்ந்திருக்கிறார்கள்!

பழநி முருகனுக்கே மொட்டை?

x