பக்கவாதம் அறிவோம் - டாக்டர் கு. கணேசன்


நம் தாத்தா காலத்தில், ‘காலையில் எழுந்திருக்கும்போது நல்லாத்தான் சார் இருந்தார். பாத்ரூம் போயிட்டு வரும்போது, தலை சுத்துதுன்ணு சொன்னார்… அடுத்த நிமிஷத்திலே மயங்கி விழுந்தார். வாய் கோணிப்போச்சி, கை, கால் வராமப் போச்சி…’ என்று வீடுகளில் அழுது புலம்புகிறார்கள் என்றால், பாதிக்கப்பட்ட அந்த நபர் அறுபது வயதைக் கடந்த ‘பெருசா’கத்தான் இருப்பார்; ‘ஸ்ட்ரோக்’ எனப்படும் பக்கவாதம் தாக்கிப் படுத்த படுக்கையில் கிடப்பார்.

ஆனால், இன்றைக்கு இதே நிலைமையில் முப்பது வயதுள்ள இளைஞர்களை மருத்துவமனைக்கு அழைத்துவருவது அதிகரித்துவருகிறது என்பதுதான் துயரம். என்ன காரணம்?

இன்றைய லைஃப் ஸ்டைல்! அதன் விளைவால் வரும் இளமை ரத்தக்கொதிப்பு. இளமை நீரிழிவு, உடற்பருமன், பன்னாட்டு உணவுகளால் பொங்கிப் பெருகும் ரத்தக்கொழுப்பு, சின்ன வயதிலேயே புகைப்பழக்கம், மதுப்பழக்கம், மன அழுத்தம் போன்ற ‘பங்காளிகள்’ இளம் வயதினருக்குப் பக்கவாதம் வருவதற்குப் பாதை போடுகின்றன.

மனித மூளையைத் ‘தலைமைச் செயலகம்’ என வர்ணித்தார் எழுத்தாளர் சுஜாதா. அத்தனை முக்கியத்துவம் வாய்ந்த செயலகத்தில் பாதிப்பேர் திடீரென்று ஸ்டிரைக் செய்தால் என்ன ஆகும்? பல்துறை நிர்வாகம் நிலைகுலைந்துவிடும்.

x