நினைவில் இருந்த தெரு- ஷங்கர்பாபு


செல்வராஜ், குரோம்பேட்டையில் கடை ஒன்றில் நின்றுகொண்டிருந்தபோது அந்தக் கேள்வி கேட்கப்பட்டது. இத்தனைக்கும் அந்தக் கேள்விக்குப் பதிலளிப்பதற்காக அவன் அங்கு வரவில்லை. கடை கட்டப்பட்ட வருடம் 1989 என்ற அறிவிப்பு இருந்தது. எனவே, அதே பகுதியில் கடைக்காரர் நீண்ட நாட்களாக இருந்துவருவதற்கான வாய்ப்பு இருப்பதால், அவருக்குத் தெரிந்திருக்கலாம் என்ற அனுமானத்தில் அவரைப் பார்த்துக் கேட்கப்பட்டிருக்கலாம். "ஷா காட்டேஜ் எங்க இருக்கு?"

கடைக்காரர் தனது மூளையின் பூகோள நினைவாற்றல் பகுதியைக் கசக்கிப் பிழிவதற்கான அறிகுறிகள் கிடைத்தன. ஆனால், அவை ஷா காட்டேஜுக்கு வழி காட்டவில்லை. கடைப் பையன்களுக்கும் தெரியவில்லை. வழி கேட்டவருக்கு உதவிட வேறு சிலரும் களத்தில் குதித்தார்கள். இந்த நேரத்தில்தான் செல்வராஜ் கடைக்குப் போய்ச்சேர்ந்தான். வழி காட்டினான்.

கடைக்காரர் வியப்புடன், "எப்படீங்க, நாங்கள்லாம் எத்தனை வருசமா இதே இடத்துல இருக்கோம், எங்களுக்குத் தெரியல பாருங்க..."என்றார்.

இதுமாதிரி சிலர் இந்தப் பிராந்தியத்திலும், இதைச் சுற்றியுள்ள பகுதியிலும் யாராவது வழியோ முகவரியோ கேட்டால், அவர்களை ஆற்றுப்படுத்துவது இது முதல் தடவையல்ல. சிலர் முகவரியை நேரடியாகக் கேட்காமல் சுற்றிவளைத்து "நீங்க இந்த ஏரியாதானா?" என்பார்கள். செல்வராஜ் அலட்சியத்துடன், "உங்களுக்கு எங்க போகணும்... அதச் சொல்லுங்க" என்பான். அவ்வளவு தன்னம்பிக்கை! அவனுக்குத் தெரியாதவர்கள் மட்டுமல்ல--தெரிந்தவர்கள், நண்பர்கள்கூட சென்னையிலுள்ள இடங்களுக்கான பாதைகளை அவனிடம் பெற்றுச்சென்றார்கள்.

x