மொழிபெயர்ப்பில் மலர்ந்த நட்பு!


புதுச்சேரியின் துணை நிலை ஆளுநர் கிரண் பேடி, முதல்வர் நாராயணசாமி இருவருக்கும் இடையிலான மோதல் உலகறிந்தது. இந்த மோதலுக்கு நடுவில் எதிர்பாராத ஒரு அதிசயமும் நடந்தது. கடந்த வாரம் புதுச்சேரி கம்பன் விழாவில் இவர்கள் இருவரும் ஒன்றாகக் கலந்து கொண்டனர்.

அப்போது, தனது ஆங்கில உரையை மொழிபெயர்க்க நாராயணசாமியை அழைத்தார் கிரண் பேடி. இதைக் கேட்டதும் அரங்கமே கைதட்டி ஆர்ப்பரித்தது. தனது உரையைத் தொடங்கும் முன், “நான் உங்களை அடுத்த பத்து நிமிடங்களுக்கு மட்டுமே நம்புவேன்” என்று நாராயணசாமியிடம் சிரித்துக்கொண்டே சொன்னார் பேடி. “நானும் உங்களை ஒரளவு மட்டுமே நம்புவேன்” என்று சிரித்த முகத்துடன் பதிலடி கொடுத்தார் நாராயணசாமி. உடனே, “தங்களின் தற்காலிக நட்புக்கு நன்றி. ஆனால், நாம் நிரந்தர நண்பர்களாக இருக்க முடியும்” என்று நேசக்கரம் நீட்டினார் பேடி. அந்தச் சில நிமிடங்கள் கம்பன் கலைவிழா மேடை கலகலப்பில் மூழ்கியது.

கொள்ளைக்கு வழிவகுக்கும் தாமதம்

2018-19 கல்வி ஆண்டுக்கான தனியார் பள்ளி கட்டணத்தை நிர்ணயித்து ஏப்ரல் 30-ம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டது. ஆனால்,இதுவரை தனியார் பள்ளிக் கட்டண நிர்ணயக் குழு, 5,500 பள்ளிகளுக்குத்தான் கட்டணம் நிர்ணயித்துள்ளது. இன்னும் 4,500 பள்ளிகளுக்கு நிர்ணயம் செய்யவில்லை. கட்டணம் இறுதிசெய்யப்பட்ட 5,500 பள்ளிகளின் கட்டண விவரங்களும் இன்னும் வெளியிடப்படவில்லை. இந்தத் தாமதம் தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளைக்கு வழிவகுக்கும் என்று கல்வியாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். கட்டண நிர்ணயக் குழுவின் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கவும், இவர்கள் வலியுறுத்துகின்றனர். கூடுதல் கட்டணம் செலுத்த மாட்டோம் என்று ஒருமித்த குரலில் மறுக்க, பெற்றோரும் தயாராக வேண்டும்.

x