உடன்குடி அருகே செடி வைக்க தோண்டிய குழியில் நடராஜர் சிலை கண்டெடுப்பு


உடன்குடி அருகே உள்ள சீர்காட்சியில் செடி வைக்க குழி தோண்டியபோது கிடைத்த நடராஜர் சிலை.

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே உள்ள சீர்காட்சியில் வீட்டில் செடி வைக்க குழி தோண்டிய போது நடராஜர் சிலை கிடைத்தது. இதையடுத்து, திருச்செந்தூர் வட்டாட்சியரிடம் அச்சிலை ஒப்படைக்கப்பட்டது.

உடன்குடி அருகே சீர்காட்சி கிராமத்தை சேர்ந்த பொன் நாடார் மகன் வேல்குமார் என்ற வின்சென்ட். இவர் இன்று காலை தனது வீட்டின் பின்புறம் செடி வைப்பதற்காக குழி தோண்டியுள்ளார். அப்போது மண்வெட்டியால் வெட்டும் போது விநோதமான சத்தம் கேட்டுள்ளது. உடனே அந்த இடத்தில் கை வைத்துத் தோண்டிய போது கை, கால் துண்டிக்கப்பட்ட சிலை ஒன்று இருந்துள்ளது. இது குறித்து திருச்செந்தூர் வட்டாட்சியருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் வட்டாட்சியர் பாலசுந்தரம், மாநாடு தண்டுபத்து கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேசன், மெஞ்ஞானபுரம் காவல் உதவி ஆய்வாளர் ராமச்சந்திரன் ஆகியோர் வின்சென்ட் வீட்டுக்கு வந்தனர். தொடர்ந்து அங்கிருந்த சிலையை வட்டாட்சியர் கைப்பற்றினார். அந்த சிலை சுமார் 10 கிலோ எடையும், இரண்டரை அடி உயரமும் கொண்ட ஆனந்த தாண்டவம் ஆடும் நடராஜர் சிலை ஆகும்.

சிலையில் இரண்டு கால்கள், கை, தலைமேல் உள்ள குமிழ் போன்றவை இல்லை. மேலும் சிலையின் பீடமும் இல்லை. இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், “சிலையை அருங்காட்சியத்துக்கு அனுப்பி, அந்த சிலை ஜம்பொன் சிலையா அல்லது வேறு உலோகத்தால் செய்யப்பட்டதா என்பது குறித்து ஆய்வு செய்யப்படும்” என்றனர்.