வன்முறைக்கு வித்திட்ட குடிநீர்ப் பற்றாக்குறை
கோடை காலம். வெயிலுடன் சேர்ந்து குடிநீர்ப் பிரச்சினையும் உச்சமாக இருக்கிறது. நகரங்களில் லாரி தண்ணீர் உள்ளிட்ட மாற்று ஏற்பாடுகள் மூலம் நிலைமை கட்டுக்குள் வைக்கப்பட்டிருந்தாலும், கிராமப்புறங்களில் அது பெரும் பிரச்சினையாகவே இருந்து வருகிறது. திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே ராமநாதபுரம் மற்றும் பாறைபட்டி கிராம மக்களிடையே தண்ணீர் பிரச்சினை காரணமாக மோதல் ஏற்பட்டு ஐந்தாறு பேர் படுகாயமடைந்திருக்கிறார்கள். இரு ஊர்களும் ஒரே ஊராட்சியைச் சேர்ந்தவைதான்.
ராமநாதபுரம் ஊர் எல்லையில் உள்ள ஆழ்துளை கிணற்றில் இருந்து, பாறைபட்டிக்குத் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. குழாயை உடைத்து ராமநாதபுரம் மக்கள் தண்ணீரைப் பிடித்ததால், வாரக்கணக்கில் தண்ணீர் வராத கோபத்தில் பாறைபட்டி மக்கள் அதனைக் கண்டிக்கப்போய் வன்முறை வெடித்திருக்கிறது. இரண்டு ஊர்களிலும் போராட்டங்கள் தொடர்கின்றன. கிராமப்புறங்களிலும் குடிநீர்ப் பிரச்சினை தலைவிரித்தாடுவதையே இந்தச் சம்பவங்கள் உணர்த்துகின்றன. அரசின் கவனம் கிராமப்புறங்களின் பக்கம் திரும்புமா?
குழந்தைகளைக் கொண்டாடும் நூலகம்!