இழுத்து மூடப்படும் ரயில்வே சேவைகள்!


ரயில்வே பள்ளிகளைத் தொடர்ந்து மருத்துவ மனைகளையும் ரயில்வே காவல் படைகளையும் மூடுவதற்கான நடவடிக்கைகளிலும் இறங்கியிருக்கிறது.

வேலைவாய்ப்பு வழங்குவதிலும், ஊழியர்களுக்குச் சலுகைகள் வழங்குவதிலும் இந்தியாவின் மிகப்பெரிய அரசுத்துறையாக ரயில்வே துறை விளங்கிவருகிறது. ஆனால், இந்தப் பெருமை வெகு நாள் நீடிக்காது போலிருக்கிறது! காரணம், ரயில்வே துறையின் சேவைகள் பலவும் நிறுத்தப்பட்டுத் தனியார்மயமாக்கும் நடவடிக்கைகள் தொடங்கிவிட்டதுதான்.

2015-ல், ஏழாவது ஊதியக்குழுப் பரிந்துரையில் உள்ள முரண்பாடுகளைக் களைய அமைக்கப்பட்ட விவேக் தேப்ராய் கமிட்டி அளித்த அறிக்கைபடி, ‘ரயில் ஓட்டுவதுதான் ரயில்வேயின் வேலை. அதைத்தவிர மற்ற வேலைகளை எல்லாம் ஒன்று தனியாருக்கு விடலாம் அல்லது மூடிவிடலாம்’ என்று பரிந்துரைத்தது. இதை ரயில்வே துறையும் ஏற்றுக்கொண்டதாகத் தெரிகிறது. அதன்படியே தற்போது தென்னக ரயில்வே தன் கட்டுப்பாட்டில் உள்ள ரயில்வே பள்ளிகளில் இந்தாண்டு மாணவர் சேர்க்கையை நிறுத்தவும், ஏற்கெனவே படிக்கும் மாணவர்களை வேறு பள்ளிகளுக்கு மாற்றவும், அடுத்தாண்டு முழுமையாக பள்ளிகளை மூடிவிடவும் உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவின் பேரில் தமிழகத்தில் மதுரை, திருச்சி, ஈரோடு, விழுப்புரம், பெரம்பூர், அரக்கோணம், ஜோலார்பேட்டை, போத்தனூர், கேரளாவில் பாலக்காடு ஆகிய 9 ரயில்வே பள்ளிகள் அடுத்த கல்வியாண்டு முதல் மூடப்படுகின்றன. இதனால், ஏறக்குறைய 3,500 மாணவர்கள், 320 ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் பாதிக்கப்படுவார்கள். வேலை இழக்கும் ஆசிரியர்களுக்கும் அலுவலர்களுக்கும் ரயில்வே அலுவலகத்திலேயே பணி ஒதுக்கப்படும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

x