ரத்தக்கொதிப்பை அடக்கும் அங்குசங்கள்!


அதிக உப்பு = ரத்தக்கொதிப்பு... இது ஒரு மருத்துவச் சமன்பாடு!

உப்புக்கும் ரத்தக்கொதிப்புக்கும் இடையே உள்ள தொடர்பை உலக அளவில் நிரூபித்துக்காட்டிய ‘இண்டர்சால்ட்’ எனும் ஆய்வு, மருத்துவச் சரித்திரத்தில் முக்கியத்துவம் வாய்ந்தது. ஒரே சமயத்தில் பல நாடுகளில் ஐம்பதுக்கும் மேற்பட்ட நகரங்களில் 35 வயதுக்கும் மேற்பட்ட 10,079 பேரிடம் மேற்கொண்ட அந்த ஆய்வில், உப்பு அதிகமாகச் சாப்பிட்டவர்களுக்கு ரத்தக்கொதிப்பும், குறைவாகச் சாப்பிட்டவர்களுக்கு இயல்பான ரத்த அழுத்தமும் இருப்பதைக் கண்டறிந்தனர்.

ஏற்கெனவே ரத்தக்கொதிப்பு உள்ளவர்கள் ஒரு நாளைக்கு 100 மி.கி. உப்பைக் குறைத்தால், மேல் ரத்த அளவு 5.7 மி.மீ. மெர்க்குரி குறைவதாகவும், கீழ் ரத்த அளவு 2.7 மி.மீ. குறைவதாகவும், ரத்த அழுத்தம் இயல்பாக உள்ளவர்களுக்கு 2.7மி.மீ. மேல் அளவு குறைவதாகவும், 1.3 மி.மீ. கீழ் அளவு குறைவதாகவும், அந்த ஆய்வின் முடிவு தெரிவித்தது. அப்போதிலிருந்து ரத்தக்கொதிப்புக்கு ‘உப்பு - தப்பு’ எனும் ஆயுதத்தை அலோபதி மருத்துவம் கையில் எடுத்துக்கொண்டது.

அதற்காக உப்பே இல்லாமல் சாப்பிட வேண்டும் என்பதில்லை. ஒரு நாளைக்கு ஒரு நபர் 5 கிராம் உப்பை (சரியாகச் சொன்னால், 2.4 கிராம் சோடியம்) உணவில் சேர்த்துக்கொள்ளலாம். ஆனால், நாம் சாதாரணமாகச் சாப்பிடும் ஊறுகாய், உப்புக்கண்டம், கருவாடு, அப்பளம், வடகம், வற்றல், சட்னி, சிப்ஸ், பாப்கார்ன், முந்திரிப் பருப்பு, புளித்த மோர் போன்றவற்றில் உப்பு அளவில்லாமல் உள்ளது. மேற்கத்திய நொறுக்குத் தீனிகள், பதப்படுத்தப்பட்ட பாக்கெட் உணவுகள், துரித உணவுகள், உடனடி உணவுகள், செயற்கை வண்ண உணவுகள் ஆகியவற்றிலும் உப்பு கூடுதலாகவே இருக்கிறது. இம்மாதிரியான உணவுகளைத் தவிர்த்தாலே ரத்தக்கொதிப்பு தள்ளிப்போவது உறுதி.

x