பட்டுப் புடவையும் கொண்டையும், கொண்டையைச் சுற்றி மல்லிகையும் கனகாம்பரமும் வைத்துக்கொண்டு தயாராகும் வத்சலாவைப் பார்க்க சகிக்கவில்லை அதிதிக்கு.
"அம்மா... என்னம்மா இது? அப்பாவோட கம்பெனிக்குப் போறோம், இன்னமும் அந்தக் காலத்து நடிகை மாதிரி என்னம்மா கொண்டை இது? ஃப்ரீ ஹேர் விட்டு வாம்மா... அங்க நிறைய பேர் ஒர்க் பண்ணுவாங்க. அச்சோ... டாடி நீங்களாவது சொல்லுங்களேன்..."
இன்று பணிநிறைவு உபசார விழாவுக்குத் தயாராகும் மகளையும் மனைவியையும் பார்த்து மெலிதான புன்னகையுடன் நிறுத்திக்கொண்டார் மயில்சாமி. மனம் முழுக்க கனம். யாரேனும் கைகொடுத்தால்கூட அழுதுவிடுவார் போலத் தெரிந்தார்.
மாதம் 450 ரூபாய்க்குத் தனியார் நிறுவனத்தில் ஸ்க்ராப் அள்ளுவதற்குச் சேர்ந்தவர். படிப்படியாகத் தொழில்நுட்பம் பயிலாமலே சி.என்.சி வகை மிஷின்களுக்கு சிறந்த ப்ரோகிராம் செய்கிறது வரை வளர்ந்துவிட்டவர். பேரமைதிக்கும் உருவம் உண்டென்பதை அவரைப் பார்த்தாலே தெரிந்துகொள்ள முடியும். இதுவரை பணியில் ஒரு குறையும் வைத்ததில்லை. அதிர்ந்து பேசும் சுபாவமில்லை. சகப் பணியாளர்களின் கேலிப்பேச்சைப் பொருட்படுத்தவோ, எதிர் தர்க்கம் புரியவோ விரும்பாதவர். அனைத்துக்கும் சிரிப்பொன்றே பதில். வெள்ளிக்கிழமை மட்டும், தான் இயக்கும் இயந்திரத்துக்கு எலுமிச்சைப் பழம், பூ வைத்து பூஜை செய்துவிடுவார். பணி தொடங்குவதற்கு முன்னும் பின்னும் யாரையும் எதிர்பாராமல் சுத்தமாகத் துடைத்து வைத்துக்கொள்வார்.