மதுரை: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த சிறுவனின் இதயம், கல்லீரல், சிறுநீரகங்கள், கருவிழிகள் மற்றும் தோல் போன்ற உடல் உறுப்புகளை, அவரது குடும்பத்தினர் தானமாக வழங்கி 5 நோயாளிகளுக்கு மறுவாழ்வு கொடுத்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை லக்னக்கோட்டையை சேர்ந்த கதிரேசன் மகன் நித்திஷ் (16). இவர் கடந்த 26-ம் தேதி தனது இருசக்கர வாகனத்தில் செல்லும் போது ஏற்பட்ட விபத்தில் படுகாயம் அடைந்தார். இதையடுத்து அவர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள் நோயாளியாக சிகிச்சைப் பெற்று வந்தார். இந்த நிலையில் நித்திஷ் நேற்று மூளைச் சாவு அடைந்தார். இதையடுத்து அவரது உறவினர்கள், நித்திஷின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர்.
அவர்களது விருப்பப்படி மதுரை அரசு மருத்துவமனை நிர்வாகம், நித்திஷின் உடல் உறுப்புகளை பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெறும் நோயாளிகளுக்கு பொருத்துவதற்கு முடிவு செய்தனர். அதன் அடிப்படையில் நித்திஷின் இதயம், கல்லீரல், சிறுநீரகங்கள், கருவிழிகள், தோல் ஆகியவற்றை மருத்துவர்கள், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மற்றும் சென்னை, மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வரும் நோயாளிகளுக்கு வழங்கினர்.
அந்த நோயாளிகளுக்கு நித்திஷின் உடல் உறுப்புகள் பொருத்தப்பட்டு தற்போது அவர்கள் நலமுடன் உள்ளனர். நித்திஷ் இறந்தாலும், தன்னுடைய உடல் உறுப்புகள் மூலம் 5 பேருக்கு மறுவாழ்வு கொடுத்துள்ளது நெகிழவைத்துள்ளது.