“அய்யோ… அதை எப்படி விளக்கிச் சொல்லுறதுன்னு தெரியல டாக்டர்.” அந்தச் சிறுவனுக்குப் பதினைந்து அல்லது பதினாறு வயதிருக்கலாம். டாக்டர் சந்திரன் எனும் சந்திரசேகரன், இதுபோல பல கேஸ்களைப் பார்த்தவர். ஊரின் பிரபல மனநல மருத்துவர். மேலும், நரம்பியல் நிபுணர்… மூளைச் சலவை வித்தகர்.
மெலிதான நீலநிற ஒளியில், ஜன்னலற்ற அந்த அறையில் அவசரத்துக்கு ஒரு ஸ்கேன் கருவியும் தலை-மின் இணைப்புக் கவசமும் மின் நாற்காலியும் உண்டு. மைக்கேல் ஜாக்சன், ஜஸ்டின் பீபர், இல்லையேல் கத்ரி கோபால்நாத், லால்குடி வயலின் என்று நோயாளிகளின் மனப்பிறழ்வுக்குத் தக்கவாறு அருவிபோல இசை கொட்டுகிறது.
“இது கண்டிப்பா பெர்ஸிக்யூஷன் காம்ப்ளெக்ஸுக்கு நேரெதிர் நிலைதான் டாக்டர்” சிறுவனின் குரல் உயர்ந்திருந்தது.
அவனது அக்காவும் அம்மாவும் உடன் வந்திருந்தார்கள். “காத்துக்கறுப்புதான் அடிச்சிருக்கு சாமி…” என்று அந்த அம்மா அலறியது டாக்டர் சந்திரனுக்குப் பிடிக்கவில்லை. “பதினோராம் வகுப்பு சார். பப்ளிக் எக்ஸாம் வேற நடந்துகிட்டிருக்கு” இது அக்கா, ஏதோ கல்லூரி மாணவி. “ராத்திரியில ஓவரா பினாத்துது தம்பி… ரொம்ப பயமா இருக்கு சார்?” என்றாள் விழிகள் பளபளபக்க. அவர்களை வெளியே உட்காரவைத்திருந்தார். அந்தப் பையனை நேராகக் கண்களைக் கண்டு உரையாட முயன்றார். அவன் தரையை அல்லது கதவைப் பார்த்தான். பெயர் சாம். சாமுவேல்.