ஒரே ஆண்டில் முதலீடுகள் மூன்று மடங்கு சரிவு
பொருளாதார வளர்ச்சிக்கும் மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்படுவதற்கும் முதலீடுகள் முக்கியமானவை. ஆனால், தமிழ்நாட்டில் முதலீடுகள் செய்யப்படுவது வழக்கத் துக்கு மாறாகக் குறைந்துவருகிறது. மத்திய வர்த்தகத் துறையின் கீழ் செயல்படும் தொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டு துறை (டி.ஐ.பி.பி.) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி கடந்த 2016-ம் ஆண்டில் தமிழ்நாட்டில் ரூ. 4,793 கோடி முதலீடு செய்யப்பட்டிருந்தது. இது 2017-ல் ரூ. 1,574 கோடியாக குறைந்திருக்கிறது. ஒரே ஆண்டில் மூன்று மடங்கு வீழ்ச்சி!
2017-ல், தமிழக அரசு பல்வேறு நிறுவனங்களுடன் 62 முதலீட்டு ஒப்பந்தங்களைச் செய்துகொண்டது. இவற்றின் மதிப்பு ரூ. 3,131 கோடி. ஆனால், இந்த மதிப்பில் 50 சதவீதம் மட்டுமே முதலீடாக வந்துள்ளது. ஒன்பது நிறுவனங்கள் மட்டுமே முதலீடு செய்துள்ளன. பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையிலும் முதலீடுகளைக் கவர்ந்துள்ள பட்டியலில் தமிழ்நாடு பின்தங்கியே இருக்கிறது. மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம், குஜராத், ஆந்திரம், தெலங்கானா மாநிலங்கள் தமிழகத்தைக் காட்டிலும் அதிக முதலீடுகளைக் கவர்ந்துள்ளன.
அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் ரூ. 18,993 கோடியும், மத்தியப் பிரதேசத்தில் ரூ. 11,715 கோடியும் முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன. குஜராத், ஆந்திரம், தெலங்கானா மாநிலங்களில் முறையே ரூ. 9,795 கோடி, ரூ. 4,509 கோடி, ரூ. 3,306 கோடி முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன. பட்டியலில் முந்தைய ஆண்டைக் காட்டிலும் முதலீடுகள் குறைந்துள்ள ஒரே மாநிலம் தமிழகம் மட்டுமே!