முப்பத்தியெட்டு கல்லறைகள்- கதிரவன்


அறைக்குள் எரிந்துகொண்டிருந்த குழல்விளக்கு மினுக்கத் தொடங்கியதும், அவளுக்கு உருவமற்ற ஏதோ ஒன்று அறையின் மூலைகளுக்கிடையே இடம் மாறுவதாகத் தோன்றியது. கோடைக்கால வெக்கை தாளாமல், அண்டை வீடுகளின் குளிர்சாதன உபயோகம் கருக்கலிலேயே இப்போதெல்லாம் ஆரம்பமாகிவிடுகிறது. அணைந்து அணைந்து எரியும் விளக்கு மேலும் அவளை அச்சமூட்டியது. கயிற்றில் இணைக்கப்பட்டு தொங்கிக்கொண்டிருந்த குண்டுபல்பின் நிழல், வாயை அகலத் திறந்து விழுங்கக் காத்திருக்கும் மலைப்பாம்பாய் நெளிந்தது.

அவளை எப்போதும் உயிர்ப்புடன் வைத்திருக்கும் தொலைக்காட்சியையும் அணைத்து வைத்திருந்தாள். சில தினங்களுக்கு முன் தன்னைத் தானே உயிர்ப்பித்துக்கொண்ட தொலைக்காட்சியின் அலறலில் பயந்தவளாக உடல் சிலிர்த்து சில பாத்திரங்களைத் தவறவிட்டு, கைகளையும் கால்களையும் இழுத்துக்கொண்டே இரண்டு காதுகளையும் பொத்தியபடி சமையலறையின் சுவரோரம் பதுங்கி அழுதுகொண்டிருந்தாள்.

அவளைப் பயமுறுத்த ஏதேனும் ஒரு காரணம் இருந்துகொண்டே இருந்தது. கண்ணாடியில் முகம் பார்த்துக்கொண்டிருக்கையில் ஏதோ ஓர் உருவம் அவளை எப்போதும் வெறித்துப்பார்ப்பதாகவே தோன்றும். அவன் இல்லாத சமயங்களில் கண்ணாடி பார்ப்பதையே தவிர்த்துவிடுவாள். அல்லது ஒரு நொடிக்கும் குறைவான கால இடைவெளியில் கண்ணாடியைப் பார்த்துவிட்டு தனது முகத்தை வேறொரு பக்கம் திருப்பிக்கொள்வாள். மனதிலும் வேறேதோ ஒன்றை ஓடவிட்டு அந்த உருவம் குறித்த எண்ணத்தைத் தவிர்க்க முற்படுவாள்.

இல்லையேல்,ஏதேனும் ஒரு பாட்டை முணுமுணுத்து அதன் மீது கவனத்தைக் குவித்துக்கொள்வாள். தலை சீவும்போது அரைநொடி அரைநொடியாகப் பத்து ப் பதினைந்து முறை கண்ணாடி பார்த்து மீள்வது வாடிக்கையாக இருந்தது. அவளருகே டார்ச் விளக்கு எப்போதுமிருக்கும்.

x