தமிழ் எங்கள் உயிருக்கு நேர்!- மியான்மரில் பரவும் வள்ளுவ நெறி


ஒரு காலத்தில் தமிழ் கோலாச்சிய மியான்மரில் (பர்மா), இப்போது 12 லட்சம் தமிழர்கள் மட்டுமே வசிக்கிறார்கள். இவர்களிலும் பெரும்பாலானவர்கள் தமிழ் அடையாளங்களை முற்றாகத் துறந்து மியான்மர்வாசிகளாகவே மாறிவிட்டார்கள். இவர்களின் குழந்தைகள், வீட்டுக்குள்கூட பர்மிய மொழியையே பேசுகின்றன. இந்த நிலையை மாற்ற பர்மாவில் உள்ள இந்துக்கோயில்களில் வாராந்திர தமிழ் வகுப்புகளை நடத்தி குழந்தைகளுக்குத் தமிழை அறிமுகப்படுத்தி வருகிறார்கள் தமிழ் ஆர்வலர்கள்.

அவர்களில் முக்கியமானவர் ப.கொ.ராமசாமி. மியான்மரில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் நகரான தட்டோனில், குழந்தைகளுக்குத் தமிழ் கற்பிப்பதுடன், அவர்களுக்குத் திருக்குறளையும் அறிமுகப்படுத்தி வருகிறார். அங்கு வள்ளுவத்தைப் பரப்ப வசதியாக மே முதல் தேதி ‘வள்ளுவர் கோட்டம்’ திறப்பு விழாவை நடத்த முடிவெடுத்திருக்கிறார்கள் தமிழ் ஆர்வலர்கள்.

திறப்பு விழாக்குழு தலைவர் நா.அப்பாவுவிடம் ‘வாட்ஸ்அப்’ வழியே பேசினோம். “ப.கொ.ராமசாமி அய்யா, இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பே இந்தப் பணியைத் தொடங்கிவிட்டார். ஒரு பெரிய மண்டபத்தின் முகப்பில், சென்னையில் இருப்பது போலவே ஒரு வள்ளுவர் கோட்டத்தையும் கட்டினார். தேரின் கருவறைக்குள் திருவள்ளுவர் சிலையையும் நிறுவினார். மொத்தம் 9,600 சதுரடியில் அமைந்திருக்கிறது வள்ளுவர் கோட்டம். மியான்மரில் ராணுவ ஆட்சி நடந்ததாலும், சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் தொடர்ந்ததாலும் அதன் திறப்பு விழாவை முறைப்படி நடத்த முடியாமலேயே போய்விட்டது.

தற்போது ஜனநாயகம் மலர்ந்து அமைதி நிலவுவதால், வள்ளுவர் கோட்டத் திறப்பு விழாவை தேசம் தழுவிய விழாவாக நடத்த முடிவெடுத்தோம். இதற்காக, மியான்மரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 133 பேர் கொண்ட விழாக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இருந்தும் தமிழ் ஆர்வலர்களை விழாவுக்கு அழைத்திருக்கிறோம். தமிழகத்திலிருந்து கல்வி அமைச்சர், தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் வருவதாகச் சொல்லியிருக்கிறார்கள்” என்றார்.

x