போலிகளைத் தடுக்கிறார்களா... உண்மையை மறைக்கிறார்களா..?


கையால் மலம் அள்ளும் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களை அதிலிருந்து விடுவிக்கும் விதமாக அவர்களுக்கு சில உதவிகளை வழங்க மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை முன்வந்துள்ளது. இதன்மூலம், ரூ.40,000 நிதி உதவி, ரூ.3,000 மாதாந்திர தொகை, இரண்டு ஆண்டு திறன் வளர்ப்புப் பயிற்சி மற்றும் தொழில் தொடங்க உதவி உள்ளிட்ட பலன்கள் அவர்களுக்குக் கிடைக்கும். இதற்காக நாடெங்கும் அத்தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களை கணக்கெடுக்கும் பணி நடைபெற்றுவருகிறது.

தமிழகத்தில் முதல் கட்டமாக சென்னை, மதுரை, திருவள்ளூர், கோவை, கன்னியாகுமரி, திருச்சி ஆகிய ஆறு மாவட்டங்களில் கணக்கெடுப்பு நடக்கிறது. முதல் கட்ட கணக்கெடுப்பு ஏப்ரலில் நிறைவடையும் நிலையில், தமிழக அரசு அதிகாரிகள் இதுகுறித்து போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தவில்லை. இதனால், இந்தக் கணக்கெடுப்பு நடப்பதே சம்பந்தப்பட்ட தொழிலாளர்களைச் சென்றுசேரவில்லை என குற்றம்சாட்டுகிறது ‘சஃபாய் கர்மசாரி அந்தோலன்’ என்ற அமைப்பு.

நாடு முழுவதும், கையால் மலம் அள்ளும் தொழிலாளிகளுக்காக பணியாற்றும் அரசு சாரா இவ்வமைப்பு, நாள் ஒன்றுக்கு 15-20 பேர் மட்டுமே கணெக்கெடுப்புக்கு வருவதாகச் சொல்கிறது. மேலும், அப்படி வருவோரிலும் பலரைப் போதுமான ஆதாரம் இல்லை என்று சொல்லி அதிகாரிகள் திருப்பி அனுப்பி விடுவதால், மலம் அள்ளும் தொழிலாளிகளின் எண்ணிக்கை தவறாகவே பதிவாகும் என்றும் கவலை தெரிவிக்கிறது அந்த அமைப்பு.

இந்தியாவில், கையால் மலம் அள்ளுவது சட்டப்படி தடை செய்யப்பட்டுவிட்டாலும், வேறு வாழ்வாதார வாய்ப்புகள் இல்லாத பலர் இன்னும் இந்தத் தொழிலில் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள். சில இடங்களில் ஆதிக்க சாதியினரின் வற்புறுத்தலின் பேரிலும் குறிப்பிட்ட சாதியினர் இத்தொழிலில் தள்ளப்படுகின்றனர். இதனால் பலபேர் இந்தத் தொழிலைச் செய்கிறோம் என்று சொல்லவும் அஞ்சுகிறார்கள். இவர்களில் பலரிடம் போதுமான ஆதாரங்கள் இல்லாமல் இருக்கலாம்.

x