புற்றுக்கட்டிகளுக்கு முடிவுகட்டலாம் வாருங்கள்


“ஆறாவது தெரு ‘பெருசு’ ஆறுமுகத்துக்குக் குடல்ல புத்துநோயாமே! என்ன பாவம் செஞ்சாரோ… ஆடி அடங்குற வயசுல இந்தக் கொடுமை வந்திருக்கு!” – இம்மாதிரியான பேச்சுகள் கால் நூற்றாண்டுக்கு முன்பு ஊர்க்காடுகளில் எப்போதாவது கேட்பதுண்டு. தற்போது “ஆறாவது படிக்கும் அரவிந்துக்கு மூளையில கட்டியாம். அடையாறுக்குப் போயிருக்காங்க!” என்று பேசுவது அதிகமாகிவருகிறது.

வாழ்க்கைமுறையில் மாற்றங்கள் நிகழ நிகழ ரத்தக்கொதிப்பு, மாரடைப்பு, நீரிழிவு, புற்றுநோய் உள்ளிட்ட தொற்றாநோய்கள் நம்மைத் தாக்கக்கூடிய வயது குறைவதுதான் இதற்குக் காரணம். வம்சாவளியில் ஏற்படுகிற மரபணுப் பிழை, காற்று மாசு, வைரஸ் தொற்று… இவைதாம் குழந்தை புற்றுநோய்க்கு முக்கியக் காரணங்களாக முன்பு சொல்லப்பட்டன.

இப்போதோ நிலைமை மாறிவிட்டது. குழந்தைகளுக்கு அணிவிக்கப்படும் டயாப்பரில் தொடங்கி, பேபி சோப்பு, பேபி பவுடர், பேபி ஷாம்பூ, லிப்ஸ்டிக், முகத்தில் பூசிக்கொள்ளும் கிரீம்கள், அழகுசாதனப் பொருள்கள், வாசனை திரவியங்கள், பிளாஸ்டிக் விளையாட்டுப் பொருள்கள், சாப்பிடும் பல வண்ண மிட்டாய்கள், சாக்லேட்டுகள், பேக்கரி பண்டங்கள் வரை எல்லாமே ‘ரசாயன வெடி’களால் தயாரிக்கப்படுபவை. குழந்தையின் உடலுக்குள் இவை துளித்துளியாகப் புகுந்து, நோய் எதிர்ப்புசக்தியைச் சிதைத்துவிடுவதால், பூனை தூங்கும் வீட்டில் எலி நுழைவதுபோல புற்றுநோய் சுலபமாக நுழைந்துவிடுகிறது.

பொதுவாக, புற்றுநோய் வந்தவர் குழந்தையானாலும் சரி, வயதானவரானாலும் சரி, மருத்துவத்துக்குத் தயாராவதைவிட மரணத்தைச் சுமக்கத் தயாராவதுதான் அதிகம். இன்றைய அறிவியல் யுகத்தில் இந்தத் துயரத்தை எளிதில் மாற்ற முடியும். அந்த மாற்றத்துக்கான வழி நம்மிடமே உள்ளது.

x