சிறிய பறவை சிறகை விரித்துப் பறக்கிறதே...
ஜானகியின் தேன் குரல் வழிந்துகொண்டிருந்தது. பேருந்து மொத்தமும் அந்தக் குரலுக்கும், தொடர்ச்சியாக வழிந்துகொண்டிருந்த ராஜாவின் பாடலுக்கும் அடிமையானதுபோல தோன்றியது.
மயிலாடுதுறை - கும்பகோணம் பேருந்து பயணம் ரம்யமாக இருக்கும். இருபுறமும் பரந்து கிடக்கும் வயல்வெளிகள், அணிவகுத்து நிற்கும் தென்னை மரங்கள், வேஷ்டி சட்டை ஆண்கள், புடவை பெண்கள், இவற்றோடு ராஜாவும் சேர்ந்துகொள்ள பேரின்பமாக இருந்தது. எதிர்பாராத நேரத்தில், எதிர்பாராத இடத்தில் வழியும் பிடித்தமான ராஜாவின் பாடல்கள் எப்போதும் ரசனைக்குரியவை.
நான் அமர்ந்திருந்தது பேருந்தின் கடைசி வரிசை. அங்கிருந்து பார்த்தபோது, அமர்ந்திருந்தவர்களின் உடல்மொழி பேருந்தின் குலுக்கலா இல்லை ராஜாவின் இசை ரசிப்பா என்று புதிர் போட்டது. இடமில்லாமல் நின்றுகொண்டிருந்தவர்களும் ஏதோ ஒரு கட்டளைக்குக் கட்டுப்பட்டவர்கள் போல சிற்பமாக சமைந்திருந்தார்கள்.