மருத்துவ மாணவர்களுக்கு துன்புறுத்தல் புகார்: புதுச்சேரி அரசு, ஜிப்மர் அதிகாரிகளுக்கு நோட்டீஸ்


புதுச்சேரி: ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் மாணவர்கள் துன்புறுத்தப்படுவது தொடர்பான எழுந்த புகாரின் அடிப்படையில், தேசிய பட்டியலின ஆணையம் புதுச்சேரி அரசு மற்றும் ஜிப்மர் அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில்,15 நாட்களுக்குள் விரிவான அறிக்கை தராவிட்டால், சம்மன்அனுப்பப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஜிப்மரில் ஜூனியர் ரெசிடென்ட் மாணவர் ஒருவரால், சாதி துஷ்பிரயோகம், உடல் ரீதியாக தீங்கு விளைவித்தல், தற்கொலைக்குத் தூண்டுதல் போன்ற குற்றச் சாட்டுகள்எழுப்பப்பட்டன. மேலும், ஜிப்மர் டீனிடம் அளிக்கப்பட்ட புகார்களில், மாணவர்கள் பல்வேறு வகையான துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் தெரிவித்திருந்தனர்.

2023 டிசம்பரில் வெளியிடப்பட்ட எம்.டி. பொது மருத்துவத் தேர்வு முடிவுகளின்போது, நடைமுறைத் தேர்வில் வேண்டுமென்றே தோல்விஅடையும் வகையில் பாரபட்சம் காட்டப்பட்டதாகவும் புகார் எழுந்தது. இந்தப் புகார்கள் தொடர்பாக உண்மை கண்டறியும் குழு அமைக்கப்பட்டதாக ஜிப்மர் அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனாலும், குழுவின்முடிவுகள் தங்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை என்று பாதிக்கப்பட்டவர்கள் கூறினர்.

இந்நிலையில், மாணவர்களின் புகார்களை ஏற்றுக் கொண்ட தேசிய பட்டியலின ஆணையம், இது தொடர்பாக புதுச்சேரி அரசின்தலைமைச் செயலர், டிஜிபி,முதுநிலை காவல் கண்காணிப்பாளர் மற்றும் ஜிப்மர் இயக்குநருக்கு நோட்டீஸ் அனுப்பிஉள்ளது.

மாணவர்களின் குற்றச்சாட்டுகளை விசாரிக்க முடிவு செய்துள்ளதாக, பட்டியலின ஆணைய இயக்குநர் ரவிவர்மன் தெரிவித்துள்ளார். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த அறிக்கையை 15 நாட்களுக்குள் ஜிப்மர் வழங்க வேண்டும். குறித்த காலத்தில் பதில் தரத் தவறினால் சம்மன் அனுப்பப்படும் என்றும் பட்டியலின ஆணையம் எச்சரித்துள்ளது.