மரண வலி… இது புற்றுநோய்க்கே உரித்தான வலியின் மொழி. மாத்திரை, மருந்து, ஊசி என எதற்கும் கட்டுப்படாத கொடுமையான வலி புற்றுநோய் தரும் துயரம்.
இந்தியாவில் ஆண்டுதோறும் பத்து லட்சம் பேர் புதிதாக ஏதாவது ஒரு புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர்; ஏழு லட்சம் பேர் புற்றுநோயால் இறக்கின்றனர்; 2020-ல் இந்த எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரிக்கும் என எச்சரிக்கிறது இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ஐ.சி.எம்.ஆர்.).
ஏன் இந்த நிலை?
பல காரணங்கள்! முக்கியக் காரணம் புகைப்பழக்கம். நாட்டில் பதின்பருவத்திலிருந்தே பலரும் புகைபிடிக்கத் தொடங்குவதாகப் புள்ளிவிவரம் கூறுகிறது. நிகோடின், தார், அமோனியா, பீனால், கார்பன் மோனாக்ஸைடு, பாலிசைக்ளின் அரோமேட்டிக் ஹைட்ரோ கார்பன்…. இப்படி ஆயிரத்துக்கும் மேற்பட்ட நச்சுகள் சிகரெட்டில் உள்ளன.