நீங்க ரஜினியா? கமலா? - இது அரசியல் கட்டுரை அல்ல


தலை நரைத்தவர்களைக் கேலி பேசிக்கொண்டேயிருப்போம். திடீரென்று நமக்கே நரைமுடி வந்துவிடும். அதை மறைப்பதற்கு, தலைச்சாயம் (டை) பூசுவது, புலிவாலைப் பிடிப்பதைப் போன்றது. ஒருமுறை அடித்துவிட்டால் விடவே முடியாது.

என் தந்தை 60 வயது வரையில் தலைச்சாயம் பூசியவர். இந்த விஷயம் புரியாமல், “எங்கப்பாவுக்கு 50 வயசாகப் போகுது ஒரு முடிகூட நரைக்கல” என்றெல்லாம் பெருமை பேசியிருக்கிறேன். திடீரென ஒருநாள் அவரது வாய் ‘போண்டா’ மாதிரி வீங்கி விட்டது. ‘டை அலர்ஜி’ என்பதையே சைகையில்தான் சொன்னார். கனத்த இதயத்துடன் சாயம் பூசுவதை நிறுத்திவிட்டார்.

முனிவரின் கோபத்துக்கு ஆளான இளவரசன்போல் திடீரெனக் கிழத்தோற்றம் பெற்றுவிட்டார். எனக்கே அவர் யாரோ மாதிரி தெரிந்தது என்றால், பேரப்பிள்ளைகளைக் கேட்கவும் வேண்டுமா? ‘தாத்தா தாத்தா’ என்று தோள்மீது ஏறி விளையாடியவர்கள் கிட்ட நெருங்கவே பயந்தார்கள்.

 என் மாமன்களில் ஒருவர், அப்படியே திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான துரைமுருகன் மாதிரியே இருப்பார். பெயின்ட் டப்பாவுக்குள் தலையை முக்கியெடுத்ததுபோல மின்னலடிக்கும் கருமை. பார்த்தாலே தெரியும், இது சாயம் செய்த மாயம் என்று. போதாதுக்கு கை, கால், நடை, உடை அத்தனையும் அவருக்கு வயது எழுபதுக்கு மேல் என்பதைக் கூப்பாடு போட்டுச் சொல்லிவிடும். சேதுச் சீமைப் பக்கம் ஒரு முன்னாள் அமைச்சர் இருக்கிறார். அவரது சங்கடம் வேறு மாதிரி. தலைக்கு ‘டை’ அடிப்பதைவிட, மூக்குக்குக் கீழே பென்சில் மீசை வரைவதற்குத்தான் அதிக நேரம் எடுத்துக் கொள்வார். சில நேரம் கை நடுங்கிக் கோடு கோணலாகிவிடும். அவசரத்துக்கு அழிக்கவும் முடியாது. அப்படியே பொதுநிகழ்ச்சிகளுக்கு வந்து சிரிக்கவைப்பார்.

x