சொட்டாங்கல்: தமிழச்சி தங்கபாண்டியன்


மழமழவென்று இருக்கிற கூழாங்கல் ஒன்று தொட்டிச் செடி அருகே காலில் நெருட, குனிந்து எடுக்கும்போது ‘நாலாங்கல்லப் பிடிச்சுக்கோ... நல்லபுள்ளயாப் பொழச்சுக்கோ’ எனக் கத்தும் நிறைமதி நினைவுக்குவந்தாள். அவள் ‘சொட்டாங்கல்’ விளையாட்டில் கில்லி. மடி நிறையக் கல்லோடுதான் எப்போதும் இருப்பாள். ‘ஒன்ன அடி வெளுக்கிறேன். எப்பப் பார்த்தாலும் கல்ல மடில கட்டிட்டு’ எனக் கையோங்கும் நிறைமதியின் அம்மா முகமும் மங்கலாக மேலெழும்பியது.

கரிசக் காட்டில் மழுமழுத்த கற்களுக்கு எங்கே போவது? கம்மாய் நெறஞ்சு காய்ஞ்சா, ஊறி மொண்ணையான கல்லு பொறுக்க மொத ஆளா நிறைமதிதான் நிற்பாள்.

“பள்ளியோடம் விட்டா வீட்டுக்கு ஓடணும், நிறைமதி ஒனக்குத்தான்”னு கண்ணாடி டீச்சர் கண்டிக்கிறதெல்லாம் காத்தோட போயிடும் அவளுக்கு.

“பயப்படாம வா... மில்லு சைரன் அடிக்கங்குள்ள வீட்டுக்கு ஓடிடலாம்”னு என்னையும் இழுத்துக்கொண்டு போய்விடுவாள். “அரைப் பாவாடையைச் சுருட்டிவெச்சு மேல உட்காரு” என்று என்னைக் கம்மாய்க்கரையில் உட்கார வைத்துவிட்டு இறங்குவாள்.

x