ஆசிரியர் கடிதம்


மதிப்புக்குரிய வாசகப் பெருமக்களே, வணக்கம்!

ஐந்தாண்டுகளுக்கு முன்பு ‘தி இந்து’ குழுமம் தமிழ் நாளிதழ் உலகில் அடியெடுத்துவைத்தபோது மகத்தான ஆதரவு அளித்து ஆரத்தழுவிக்கொண்டீர்கள். வழமையான பரபரப்பு இதழியலைப் புறக்கணித்து, குடும்பம் மொத்தமும் வாசிக்கும் நாளிதழாக வெளிவரத் தொடங்கியது ‘தி இந்து’ தமிழ் நாளிதழ். மிக சீக்கிரத்தில் ஒரு நல்ல பத்திரிகையை நீங்கள் அடையாளம் கண்டுகொண்டீர்கள்; அதுபோலவே லட்சக்கணக்கான நல்ல வாசகர்களை நாங்களும் அடையாளம் கண்டுகொண்டோம்.

தமிழ் வெகுஜன கலாச்சாரத்தின் ஆக்கபூர்வமான கூறுகளிலேயே நம்பிக்கை கொள்கிறது ‘தி இந்து’ குழுமம். அறிவார்த்தமான ரசனையுடன் ஆழ்ந்த வாசிப்புக்குக் காத்திருக்கும் ஒவ்வொரு தமிழ் வாசலையும் அது வந்தடைய நினைக்கிறது. தமிழ்க் குழந்தைகளுக்காக, மாணவர்களுக்காக, இளைஞர்களுக்காக, விவசாயிகளுக்காக, தொழிலாளர்களுக்காக, ஆசிரியர்களுக்காக, தொழில்நுட்ப வல்லுநர்களுக்காக, பொறியாளர்களுக்காக, மருத்துவர்களுக்காக என்று தமிழ்ச் சமூகத்தின் ஒவ்வொரு தரப்போடும் வாசிப்பின் வழி உரையாட முனைகிறோம்.

இந்த நீண்ட இலக்கின் அடுத்தகட்ட முயற்சியே உங்கள் கைகளில் தவழும் ‘காமதேனு’ வார இதழ்!
நமக்கு இடையேயான பந்தம் இந்த வார இதழின் மூலம் மேலும் நெருக்கமாகிறது… இறுக்கமாகிறது. பெரிய அளவில் வாசகர்கள் பங்கேற்புடன் செயல்படும் நாளிதழாக இன்று ‘தி இந்து’ தமிழ் நாளிதழ் வெளியாகிவருவதை நீங்கள் அறிவீர்கள். ‘காமதேனு’ வாசகர்கள் விரும்பிக் கேட்கும் நல்லனவற்றை அள்ளிக்கொடுக்கும் அட்சயக் கருவியாகச் செயலாற்றும். மக்கள் குரலை எதிரொலிக்கும். தமிழ்க் குடும்பங்களின் கண்ணியமான வார இதழாக தன்னை இது கட்டமைத்துக்கொள்ளும்.

x