புதுடெல்லி: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடருக்கான 15 பேர் கொண்ட இறுதி அணியை நேற்று முன்தினம் இரவு தேர்வுக்குழுவினர் அறிவித்தனர். இதில் ஜஸ்பிரீத் பும்ரா, யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். பும்ரா குணமடைந்துவிட்ட போதிலும் போட்டி தொடங்குவதற்குள் அவர், பந்து வீசுவதற்கான உடற்தகுதியை அடைவது சந்தேகம் என கூறப்படுகிறது. இதன் காரணமாகவே உத்தேச அணியில் இடம் பெற்றிருந்த அவர், தற்போது நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக ஹர்ஷித் ராணா சேர்க்கப்பட்டுள்ளார்.
மேலும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் நீக்கப்பட்டு சுழற்பந்து வீச்சாளரான வருண் சக்கரவர்த்தி சேர்க்கப்பட்டுள்ளார். மாற்று வீரர்கள் பட்டியலில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், முகமது சிராஜ், ஷிவம் துபே ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் 19-ம் தேதி பாகிஸ்தானில் தொடங்குகிறது. இந்திய அணி பங்கேற்கும் ஆட்டங்கள் அனைத்தும் துபாயில் நடத்தப்படுகிறது. இந்தியா தனது முதல் ஆட்டத்தில் 20-ம் தேதி வங்கதேசத்தை எதிர்கொள்கிறது.