டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வா? - மனம் திறந்தார் ரோஹித் சர்மா


டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறவில்லை எனவும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சிட்னி டெஸ்டில் அணியின் நலன் கருதி விலக மட்டுமே செய்துள்ளேன் என இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நடப்பு டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் பேட்டிங் பார்ம் சிறப்பானதாக இல்லை. 5 இன்னிங்ஸில் கூட்டாக 31 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்த அவர், சிட்னி டெஸ்ட் போட்டியில் இருந்து விலகினார். இதனால் அவர், டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறக்கூடும் என தகவல்கள் வெளியானது. இந்நிலையில் ரோஹித் சர்மா கூறியதாவது: நான் இன்னும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறவில்லை. சிட்னி போட்டியில் இருந்து மட்டுமே விலகி உள்ளேன். பயிற்சியாளர்கள் மற்றும் தேர்வுக்குழுவினருடன் இது குறித்து மிகவும் எளிதான முறையில் கலந்துரையாடினேன். என்னால் ரன் சேர்க்க முடியவில்லை, ஃபார்மில் இல்லை, சிட்னி போட்டி முக்கியமானது, இதனால் ஃபார்மில் இருக்கும் வீரர் விளையாட வேண்டும் என்றேன். அதை அவர்கள் ஏற்றுக்கொண்டனர்.

பேட்டிங் ஆர்டரில் சிலரது ஃபார்ம் சிறப்பாக இல்லை. அதிகளவில் ஃபார்மில் இல்லாத வீரர்களை கொண்டு விளையாட முடியாது. அதை நான் யோசித்து பார்த்தேன். நான் எங்கும் செல்லவில்லை. நான் ஓய்வு பெறவில்லை. எனது பேட்டில் இருந்து ரன் வராத காரணத்தால் விலகி உள்ளேன். என்னைப் பொறுத்தவரை, இந்த முடிவை எடுப்பது கடினமாக இருந்தது. ஆனால் எல்லாவற்றையும் முன்னால் வைத்தால், இந்த முடிவு விவேகமானது. இதற்கு மேல் யோசிக்க மாட்டேன்.

2007-ம் ஆண்டு முதல் இந்திய அணியின் ஓய்வு அறையை பகிர்ந்து வருகிறேன். முக்கிய நோக்கம் எப்போதும் அணியை வெற்றி பெற வைக்க வேண்டும் என்பதுதான். ஆனால் சில நேரங்களில் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அணியை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டுமானால் அணிக்கு என்ன தேவை என்பதை அறியவேண்டும். இல்லையென்றால் எந்த பயனும் இல்லை.

அணியைப் பற்றி யோசிக்கவில்லை என்றால். அந்த மாதிரியான வீரர்களை விரும்பமாட்டார்கள். அணி மட்டுமே முக்கியம். 11 வீரர்கள் இணைந்து விளையாடுவதால்தான் அணி என்று அழைக்கிறோம். ஒன்று, இரண்டு வீரர்கள் கிடையாது, 11 பேர் விளையாடுகிறார்கள், எனவே ஒரு அணியாகவே சாதிக்க முயற்சி செய்கிறோம். எனது இந்த பார்ம் அடுத்த ஐந்து அல்லது ஆறு மாதங்களுக்கு பிறகும் இப்படியே இருக்கும் என எந்த உத்தரவாதமும் இல்லை.

ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு நொடியும், அன்றாட வாழ்க்கை மாறுகிறது. எனவே நிலைமை மாறும் என்று நான் நம்புகிறேன். ஆனால் அதே நேரத்தில், நான் யதார்த்தமாகவும் இருக்க வேண்டும். எனவே ஒரு நபரிடம் உள்ளே மைக், அல்லது மடிக்கணினி அல்லது பேனா ஆகியவற்றால் அவரால் என்ன எழுதுகிறார், என்ன சொல்கிறார் என்பது எங்கள் வாழ்க்கையை மாற்றாது. நாங்கள் பல ஆண்டுகளாக இந்த விளையாட்டை விளையாடி வருகிறோம்.

எனவே நாங்கள் எப்போது விளையாட்டை விட்டு செல்ல வேண்டும், எப்போது விளையாடக்கூடாது, எப்போது வெளியில் உட்கார வேண்டும், எப்போது கேப்டனாக இருக்க வேண்டும் என்பதை இவர்களால் தீர்மானிக்க முடியாது. நான் ஒரு விவேகமுள்ள மனிதன். ஒரு முதிர்ச்சியடைந்த மனிதன். நான் இரண்டு குழந்தைகளின் தந்தை. அதனால் வாழ்க்கையில் எனக்கு என்ன வேண்டும் என்று முடிவு செய்வதற்கு கொஞ்சம் மூளை இருக்கிறது.

ஜஸ்பிரீத் பும்ராவிடம் நிறைய யோசனைகள் உள்ளன. அவர், மற்ற வீரர்களுக்கு முன்னுதாரணத்தை வடிவமைத்துள்ளார். விளையாட்டை புரிந்துகொள்கிறார். அவர், எப்போதும் அணியை முன்னோக்கி வைத்திருப்பார். கடந்த 11 ஆண்டுகளாக அவரை நான் பார்த்து வருகிறேன். 2013-ல் அவரை நான் முதன்முதலாகப் பார்த்தேன். அதில் இருந்து அவரது வளர்ச்சி உயர்ந்துள்ளது. அவர், தனது விளையாட்டால், சிந்தனையால் நிறைய வளர்ந்துள்ளார். இதை உலகமே பார்த்துக் கொண்டிருக்கிறது. அவர், மேலும் மேலும் வலுவடைந்து வருகிறார். இவ்வாறு ரோஹித் சர்மா கூறினார்.

x