ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி மற்றும் 5-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்கள் இழப்புக்கு 141 ரன்களை எடுத்து தடுமாறியது.
சிட்னியில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 185 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ரிஷப் பந்த் 40, ரவீந்திர ஜடேஜா 26, ஜஸ்பிரீத் பும்ரா 22 ரன்கள் சேர்த்தனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஸ்காட் போலண்ட் 4 விக்கெட்கள் கைப்பற்றினார். இதையடுத்து பேட் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 7.3 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 9 ரன்கள் எடுத்தது. உஸ்மான் கவாஜா 2 ரன்களில் ஆட்டமிழந்தார்.
சாம் கான்ஸ்டாஸ் 7 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். நேற்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி 51 ஓவர்களில் 181 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக அறிமுக வீரரான பியூ வெப்ஸ்டர் 105 பந்துகளில், 5 பவுண்டரிகளுடன் 57 ரன்கள் விளாசினார். சாம் கான்ஸ்டாஸ் 23, மார்னஸ் லபுஷேன் 2, ஸ்டீவ் ஸ்மித் 33, டிராவிஸ் ஹெட் 4, அலெக்ஸ் கேரி 21, பாட் கம்மின்ஸ் 10, மிட்செல் ஸ்டார்க் 1, ஸ்காட் போலண்ட் 9 ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இந்திய அணி தரப்பில் முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் தலா 3 விக்கெட்களையும் பும்ரா, நித்திஷ் குமார் ரெட்டி ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். 4 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 32 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 141 ரன்கள் எடுத்தது. யஷஸ்வி ஜெய்ஸ்வால், மிட்செல் ஸ்டார்க் வீசிய முதல் ஓவரிலேயே 4 பவுண்டரிகளை விளாசி சிறப்பான தொடக்கம் கொடுத்தார்.
மறுமுனையில் நிதானமாக விளையாடிய கே.எல்.ராகுல் 20 பந்துகளில், 2 பவுண்டரிகளுடன் 13 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்காட் போலண்ட் பந்தில் போல்டானார். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 7.3 ஓவர்களில் 42 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து ஸ்காட் போலண்டின் அடுத்த ஓவரில் ஜெய்ஸ்வாலும் ஸ்டெம்பை பறிகொடுத்தார்.
ஜெய்ஸ்வால் 35 பந்துகளில், 4 பவுண்டரிகளுடன் 22 ரன்கள் சேர்த்தார். இதன் பின்னர் இந்திய அணி ஆட்டம் கண்டது. விராட் கோலி வழக்கம் போன்று சிலிப் திசையில் கேட்ச் கொடுத்து நடையை கட்டினார். 12 பந்துகளை சந்தித்த அவர், ஒரு பவுண்டரியுடன் 6 ரன் எடுத்த நிலையில் ஸ்காட்போலண்ட் பந்தில் 2-வது சிலிப் திசையில் நின்ற ஸ்டீவ் ஸ்மித்திடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.
ஷுப்மன் கில் 13 ரன்கள் எடுத்த நிலையில் பியூ வெப்ஸ்டர் வீசிய பந்தை கிரீஸை விட்டு வெளியே வந்து விளாச முயன்றார். ஆனால் பந்து மட்டை விளிம்பில் பட்டு லெக் திசையில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் ஆனது. 78 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்த நிலையில் மட்டையை சுழற்றிய ரிஷப் பந்த் 29 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் தனது 15-வது அரை சதத்தை விளாசி அசத்தினார். அவரது அதிரடியால் இந்திய அணி 19.1 ஓவரில் 100 ரன்களை கடந்தது.
சிறப்பாக விளையாடி வந்த ரிஷப் பந்த் 33 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 61 ரன்கள் எடுத்த நிலையில் பாட் கம்மின்ஸ் ஆஃப் ஸ்டெம்புக்கு வெளியே வீசிய பந்தை அடிக்க முயன்றபோது பந்து மட்டை விளிம்பில் பட்டு அலெக்ஸ் கேரியிடம் கேட்ச் ஆனது. இதையடுத்து களமிறங்கிய நித்திஷ் குமார் ரெட்டி 4 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்காட் போலண்ட் பந்தை மிட் ஆஃப் திசையில் தூக்கி அடிக்க முயன்றார். ஆனால் பந்து சரியாக மட்டையில் சிக்காமல் பாட் கம்மின்ஸிடம் எளிதாக கேட்ச் ஆனது.
ரவீந்திர ஜடேஜா 39 பந்துகளை சந்தித்து ஒரு பவுண்டரியுடன் 8ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 17 பந்துகளை சந்தித்து 6 ரன்களும் சேர்த்து களத்தில் இருந்தனர். ஆஸ்திரேலிய அணி சார்பில் ஸ்காட் போலண்ட் 4 விக்கெட்களை வீழ்த்தினார். பாட் கம்மின்ஸ், பியூ வெப்ஸ்டர் ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர். கைவசம் 4 விக்கெட்கள் இருக்க 145 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள இந்திய அணி இன்று 3-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடுகிறது.
கேப்டனாக விராட் கோலி: சிட்னி டெஸ்ட் போட்டியின் 2-வது நாளான நேற்று மதிய உணவு இடைவேளைக்கு பின்னர் காயம் காரணமாக இந்திய அணியின் கேப்டன் ஜஸ்பிரீத் பும்ரா களத்தில் இருந்து வெளியேறினார். இதனால் விராட் கோலி அணியை வழிநடத்தினார்.
46 வருட சாதனை தகர்ப்பு: சிட்னி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிஸில் பும்ரா 2 விக்கெட்கள் வீழ்த்தினார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நடப்பு டெஸ்ட் தொடரில் பும்ரா இதுவரை 32 விக்கெட்களை வேட்டையாடி உள்ளார். இதன் மூலம் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் ஒன்றில் அதிக விக்கெட்களை வீழ்த்திய இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார் பும்ரா. இதற்கு முன்னர் 1977-1978-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற தொடரில் சுழற்பந்து வீச்சாளரான பிஷன் சிங் பேடி 31 விக்கெட்களை வீழ்த்தியதே சாதனையாக இருந்தது. 46 வருடங்களுக்குப் பிறகு இந்த சாதனையை பும்ரா தற்போது முறியடித்து உள்ளார்.