சிட்னி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 185 ரன்களுக்குச் சுருண்டது. அதைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸை விளையாடிய ஆஸ்திரேலியா முதல் நாள் ஆட்ட நேர இறுதியில் ஒரு விக்கெட் இழப்புக்கு 9 ரன்கள் எடுத்துள்ளது.
இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து பார்டர்-கவாஸ்கர் டிராபிக்கான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 4 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் இந்தத் தொடரில் ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னி மைதானத்தில் நேற்று காலை தொடங்கியது. இந்திய அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. கேப்டன் ரோஹித் சர்மா, ஆகாஷ் தீப் ஆகியோருக்குப் பதிலாக ஷுப்மன் கில், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் அணிக்குள் கொண்டு வரப்பட்டனர். இந்திய அணியின் கேப்டனாக பும்ரா செயல்பட்டார். அதே நேரத்தில் ஆஸ்திரேலிய அணியில் மிட்செல் மார்ஷுக்குப் பதிலாக அறிமுக வீரராக பியூ வெப்ஸ்டர் களமிறங்கினார். டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார்.
தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுலும், யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் களமிறங்கினர். ஆனால் இருவருமே விரைவில் ஆட்டமிழந்தனர். கே.எல். ராகுல் 4 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மிட்செல் ஸ்டார்க் பந்துவீச்சில், கோன்ஸ்டாஸிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
அதைத் தொடர்ந்து ஜெய்ஸ்வால் 10 ரன்கள் எடுத்த நிலையில், போலண்ட் பந்துவீச்சில் வெப்ஸ்டரிடம் கேட்ச் கொடுத்தார்.
அனுபவமிகுந்த ஆட்டக்காரரான விராட் கோலி 69 பந்துகளைச் சந்தித்து 17 ரன்கள் மட்டுமே எடுத்து வீழ்ந்தார். ஷுப்மன் கில் 20 பந்துகளில், நேதன் லயன் பந்துவீச்சில் ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
யாருமே நிலைத்து நின்று விளையாடாததால் 4 விக்கெட் இழப்புக்கு 72 ரன்கள் என்ற நிலைக்கு இந்திய அணி தள்ளப்பட்டது. இருந்தபோதும், ரிஷப் பந்த்தும், ரவீந்திர ஜடேஜாவும் ஓரளவுக்கு நிலைத்து விளையாடி ரன்கள் சேர்த்தனர். பந்த் 40 ரன்களும், ஜடேஜா 26 ரன்களும் சேர்த்து வீழ்ந்தனர்.
நித்திஷ் ரெட்டி 0, வாஷிங்டன் சுந்தர் 14, பிரசித் கிருஷ்ணா 3 ரன்கள் சேர்த்து பெவிலியன் வந்தனர். கடைசி நேரத்தில் பும்ரா அதிரடியாக விளையாடி 17 பந்துகளில் 22 ரன்கள் (3 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர்) எடுத்து ஆட்டமிழந்தார். சிராஜ் 3 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இறுதியில் 72.2 ஓவர்களில் இந்திய அணி 185 ரன்களுக்குச் சுருண்டது. இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் மோசமான பேட்டிங் நிலை தொடவதால் 200 ரன்கள் எடுப்பதற்குள் ஆட்டமிழந்துள்ளது.
ஆஸ்திரேலிய அணி தரப்பில் போலண்ட் 4, மிட்செல் ஸ்டார்க் 3, கம்மின்ஸ் 2, நேதன் லயன் ஒரு விக்கெட் வீழ்த்தினர். பின்னர் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸை விளையாடத் தொடங்கியது. உஸ்மான் கவாஜா 2 ரன்கள் எடுத்திருந்த நிலையில், பும்ரா பந்தில் ராகுலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ஆட்டநேர இறுதியில் ஆஸ்திரேலிய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 9 ரன்கள் எடுத்திருந்தது. சாம் கோன்ஸ்டாஸ் 7 ரன்களுடன் களத்தில் இருந்தார். இந்திய அணி தரப்பில் பும்ரா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
இந்நிலையில், இரண்டாவது நாள் உணவு இடைவேளையின் போது 5 விக்கெட்கள் இழப்புக்கு 101 ரன்கள் எடுத்திருந்தது. வெப்ஸ்டர் மற்றும் அலெக்ஸ் கேரி களத்தில் உள்ளனர்.
சிட்னி மைதானத்துக்கு வந்த 47,566 ரசிகர்கள்: சிட்னியில் நேற்று தொடங்கிய இந்தியா, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான கடைசி கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் காண 47,566 ரசிகர்கள் மைதானத்துக்கு வந்திருந்தனர்.
சிட்னி மைதானத்தில் நடைபெறும் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தைக் காண இவ்வளவு ரசிகர்கள் வந்திருப்பது இதுவே முதல்முறையாகும். இதற்கு முன்பு 2003-04-ம் ஆண்டில் சிட்னியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் 44,901 ரசிகர்கள் வந்திருந்ததே அதிகபட்சமாக இருந்தது.
3 முறை: சிட்னி மைதானத்தில் கடந்த 30 ஆண்டுகளில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 3 முறை 200 ரன்களுக்குள் ஆட்டமிழந்துள்ளது. 2000-ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 150 ரன்களுக்கும், 2012-ல் 191 ரன்களுக்கும், தற்போது 185 ரன்களுக்கும் இந்திய அணி ஆட்டமிழந்துள்ளது. 2010-ல் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 127 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளது.
போலண்ட் பந்தில் தடுமாறும் கோலி: ஆஸ்திரேலிய அணி வீரர் ஸ்காட் போலண்ட் பந்தில் விராட் கோலி தொடர்ந்து தடுமாறி தனது விக்கெட்டை பறிகொடுத்து வருகிறார். நேற்றைய போட்டியிலும் அவரது பந்திலேயே கோலி வீழ்ந்தார். இதுவரை போலண்டுக்கு எதிராக 6 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள கோலி 98 பந்துகளைச் சந்தித்து 32 ரன்கள் எடுத்துள்ளார். அதே நேரத்தில் 4 முறை அவரது பந்தில் ஆட்டமிழந்துள்ளார்.
கவாஜாவுக்கு சவாலாக இருக்கும் பும்ரா: ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜாவுக்கு சவாலாக விளங்கி வருகிறார் கேப்டன் ஜஸ்பிரீத் பும்ரா. பும்ராவுக்கு எதிராக 8 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள கவாஜா 112 பந்துகளைச் சந்தித்து 33 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அதேநேரத்தில் கவாஜாவின் விக்கெட்டை 6 முறை வீழ்த்தியுள்ளார் பும்ரா.
ரோஹித் சர்மா விலகல்: மோசமான பார்ம் காரணமாக கடைசி டெஸ்ட் போட்டியில் இருந்து இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா விலகியுள்ளார். இந்தத் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு கடைசியாக நடைபெற்ற 3 டெஸ்ட் போட்டிகளிலும் ரோஹித் சர்மா மிகக் குறைந்த ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.
இந்நிலையில், இந்தத் தொடரில் கேப்டனாக செயல்பட்ட ரோஹித் சர்மா சிட்னி டெஸ்ட் போட்டியில் இருந்து திடீரென விலகியுள்ளார். இதையடுத்து அணியின் கேப்டனாக பும்ரா செயல்பட்டார். அணியில் ரோஹித்துக்குப் பதிலாக ஷுப்மன் கில் இடம்பெற்றார்.