சென்னை: சிட்னியில் நாளை தொடங்கும் 5ஆவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணிக்கு பும்ரா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ரோகித் ஷர்மா அணியில் இருந்து விலகியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையே 5 ஆட்டங்கள் கொண்ட ஆலன் பார்டர் - கவாஸ்கர் டிராபிக்கான டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. 4 போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. கடைசி மற்றும் 5-வது டெஸ்ட் போட்டி சிட்னியில் நாளை (3ம் தேதி) தொடங்குகிறது.
ரோகித் தலைமையில் இந்திய அணி விளையாடிய கடைசி 6 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி தோல்வியைத் தழுவியுள்ளது. ஒரு போட்டி டிரா ஆகியுள்ளது. மேலும் அவர் பேட்டிங்கிலும் தொடர்ந்து சொதப்பி வருகிறார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்த தொடரின் முதல் போட்டியில் ரோகித் ஷர்மா விளையாடாததால், அந்த போட்டியை பும்ரா தான் கேப்டனாக வழிநடத்தினார்.
அந்த போட்டியில் இந்திய அணி வெற்றியும் பெற்றது. அதன் பிறகு இரண்டாவது போட்டியில் இருந்து ரோகித் ஷர்மா அணியை தலைமை தாங்கிய நிலையில், தொடர்ச்சியாக அணி பின்னடைவை சந்தித்து வருகிறது. எனவே இறுதி டெஸ்டில் பும்ரா கேப்டனாக்கப்பட்டுள்ளார்.