இந்திய கிரிக்கெட் வரலாற்றில் யாரும் செய்யாத சாதனை: ஐசிசி தரவரிசையில் பும்ரா அபாரம்!


சென்னை: ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் ஜஸ்பிரித் பும்ரா 907 புள்ளிகளை பெற்று நம்பர் 1 இடத்தை பிடித்து புதிய வரலாறு படைத்துள்ளார். 147 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், இந்திய அணி பவுலர் ஒருவர் 907 புள்ளிகளை பெறுவது இதுவே முதன்முறையாகும்.

ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 30 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார் ஜஸ்பிரித் பும்ரா. இதனால் இப்போது புதிய வரலாற்று சாதனையை படைத்துள்ளார். 2016ம் ஆண்டு ஐசிசி பவுலர்களுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் 904 புள்ளிகளை பெற்று நம்பர் 1 இடத்தை பிடித்ததே இதுவரையிலான சாதனையாக இருந்து வந்தது. இந்த சாதனையை இப்போது பும்ரா முறியடித்துள்ளார்.

இன்று புதுப்பிக்கப்பட்ட ஐசிசி தரவரிசை பட்டியலில், டெஸ்ட் பவுலர்களுக்கான தரவரிசையில் இந்திய அணியின் பும்ரா 907 ரேட்டிங் புள்ளிகளை பெற்று நம்பர் 1 இடத்தை தக்க வைத்துள்ளார். இவருக்கு அடுத்ததாக 843 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியாவின் ஹேசில்வுட்டும், 837 புள்ளிகளுடன் பாட் கம்மின்ஸும் உள்ளனர். 4ம் இடத்தில் 832 புள்ளிகளுடன் தென் ஆப்பிரிக்காவின் ரபாடாவும், 5ம் இடத்தில் 803 புள்ளிகளுடன் தென் ஆப்பிரிக்காவின் ஜான்சனும் உள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தோல்வியால் டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணி இரண்டாம் இடத்துக்கு சரிந்துள்ளது. அதே நேரத்தில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளின் தரவரிசையில் இந்தியா முதலிடத்தில் நீடிக்கிறது.

x