இந்திய கிரிக்கெட் யஷஸ்வி ஜெய்ஸ்வால் போன்ற வீரர்களை உருவாக்கியுள்ளது. இதனால் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் ஓய்வு முடிவை எடுத்தாலும் கூட இந்திய அணி வலிமையாக இருக்கும் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளரும் இரண்டு முறை உலகக் கோப்பையை வென்றவருமான டேரன் லேமன் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 1-2 என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது. பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி அதன் பின்னர் அடிலெய்டில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியிலும், மெல்பர்னில் நடைபெற்ற 4-வது டெஸ்ட் போட்டியிலும் எந்த ஒரு கட்டத்திலும் பேட்டிங்கில் போராட்ட குணத்தை வெளிப்படுத்தாமல் தோல்வி அடைந்தது.
முக்கியமாக சீனியர் பேட்ஸ்மேன்களான கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோரது மட்டை வீச்சு கடும் விமர்சனங்களுக்கு வழிவகுத்துள்ளது. அநேகமாக சிட்னியில் வரும் ஜனவரி 3-ம் தேதி தொடங்கும் கடைசி மற்றும் 5-வது டெஸ்ட் போட்டிக்கு பின்னர் ரோஹித் சர்மாவும், விராட் கோலியும் தங்களது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கை குறித்து முக்கிய முடிவை எடுக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளரும் 1999 மற்றும் 2003-ம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் போட்டி உலகக் கோப்பையை வென்ற அணியில் இடம் பெற்றவருமான டேரன் லேமன் கூறியதாவது:
ரோஹித் சர்மாவும், விராட் கோலியும் நீண்ட காலமாக இந்தியாவுக்காக சிறந்த வீரர்களாக இருந்துள்ளனர். இப்போது இளம் இந்திய வீரர்கள் முன்னேற தொடங்குவதையும், அடுத்த மட்டத்தில் சிறப்பாக விளையாடுவதையும் பார்க்க முடிகிறது. இந்திய கிரிக்கெட்டில் இவ்வளவு ஆழமான திறன் உள்ளது. இதனால் நான் அதிகம் கவலைப்பட மாட்டேன்.
ரோஹித் சர்மாவும், விராட் கோலியும் ஓய்வு பெற முடிவு செய்தாலும் திறமையான இளம் வீரர்கள் அதிகம் இருப்பதால் இந்திய அணி வலுவாகவே திகழும். யஷஸ்வி ஜெய்ஸ்வால் தற்போதைய டெஸ்ட் தொடரில் முறையே 161, 82, 84 ரன்கள் சேர்த்துள்ளார். சூப்பர் ஸ்டரான அவர், நான் பார்த்த சிறந்த வீரர்களில் ஒருவராக திகழ்கிறார்.
ஜெய்ஸ்வாலும், ஹாரி புரூக்கும் (இங்கிலாந்து) அடுத்த தலைமுறை வீரர்கள். ஜெய்ஸ்வால் பெர்த் மற்றும் மெல்பர்ன் போட்டியில் சிறப்பாக விளையாடி இருந்தார். இந்த சுற்றுப்பயணத்தில் அவர், பலமடங்கு முன்னேற்றம் கண்டுள்ளார்.
ரோஹித் சர்மா ஓய்வு பெறும்போது ஜஸ்பிரீத் பும்ரா அடுத்த கேப்டனாக இருப்பார் என்று நான் கருதுகிறேன். பெர்த் டெஸ்ட் போட்டியில் கேப்டனாக பும்ரா சிறப்பாக செயல்பட்டார். நான் பார்த்த பந்துவீச்சாளர்களில் பும்ரா சிறந்த வீரர். வாசிம் அக்ரம், கிளென் மெக்ராத் உள்ளிட்ட அனைத்து பந்துவீச்சாளர்களையும் பார்த்திருக்கிறேன். ஆனால் 2013-14 ஆஷஸ் தொடரில் மிட்செல் ஜான்சன் வெளிப்படுத்திய அபார செயல் திறனுக்கு பிறகு ஒரே டெஸ்ட் தொடரில் ஜஸ்பிரீத் பும்ரா போன்று தாக்கத்தை ஏற்படுத்திய எந்த வீரரையும் நான் பார்த்ததில்லை.
பும்ரா இந்த தொடரில் ஏற்கெனவே 30 விக்கெட்களை வீழ்த்திவிட்டார். இது மிட்செல் ஜான்சனின் திறனுடன் ஒன்றிப்போகிறது. பும்ராவின் செயல் திறன் பார்ப்பதற்கு அபாரமாக உள்ளது. இந்திய அணியை கேப்டனாக வழிநடத்தும் வாய்ப்பு கிடைக்கும்போதும் அவர், சிறப்பாக செயல்படுவார்.
ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரையில் பந்துவீச்சைப் பற்றி அதிகம் கவலைப்படவில்லை. ஏனெனில் லான்ஸ் மோரிஸ், சேவியர் பார்ட்லெட் உள்ளிட்ட இளம் வீரர்கள் ஏராளமானோர் உள்ளனர். சுழற்பந்து வீச்சாளர்கள் பரவாயில்லை, ஆனால் பேட்டிங் தான் தற்போது சோதித்து பார்க்கப்பட்டு வருகிறது. சீனியர் வீரர்கள் ஓய்வு பெறுவதால் சில மாற்றங்கள் இருக்கும், ஆனால் வேகப்பந்து வீச்சு போதுமானதாக இருக்கும். கம்மின்ஸ் மற்றும் ஸ்டார்க் எவ்வளவு காலம் தாக்குப்பிடிப்பார்கள் என்பதை காலம் சொல்லும், ஆனால் அவர்கள் அடுத்த ஆஷஸ் தொடர் வரை அணியில் இருப்பார்கள் என்று நம்புகிறேன்.
இந்திய அணியின் பயிற்சியாளராக பணியாற்றினால் பெருமையாக இருந்திருக்கும். ஆனால் நான் சர்வதேச கிரிக்கெட்டில் பயிற்சியாளர் பணியை முடித்துவிட்டேன். இளைஞர்கள் சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதே எனது விருப்பம். இவ்வாறு டேரன் லேமன் கூறினார்.