மெல்பர்னில் நேற்று தொடங்கிய பாக்சிங் டே பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொரின் 4-வது போட்டியில் ஆஸ்திரேலியாவின் 19 வயது தொடக்க வீரர் சாம் கான்ஸ்டாஸ், டி20 பாணியில் பேட் செய்து பும்ரா, சிராஜ் பந்து வீச்சை அடித்து நொறுக்கி அதிரடி அரைசதம் கண்டார். இதன் மூலம் அந்துநொந்து போன ஆஸ்திரேலிய பேட்டிங்கிற்கு அவர் உயிர் கொடுத்தார். ஆனால் அவர் ஆடிய விதம் இந்திய ஸ்டார் விராட் கோலிக்கு ஏனோ தேவையற்ற எரிச்சலைக் கொடுத்துள்ளது.
பும்ராவை ரிவர்ஸ் ஸ்கூப்பில் ஒரு சிக்ஸரையும், விக்கெட் கீப்பர் தலைக்கு மேல் சூர்யகுமார் பாணியில் ஒரு பவுண்டரியும் பிறகு ரிவர்ஸ் ஸ்கூப்பில் மீண்டும் ஒரு பவுண்டரியும், லாங் ஆனில் ஒரு சிக்ஸரும் என்று கம்மின்ஸ் கொடுத்த சுதந்திரத்தில் புதிய பந்தைத் தேய்த்து ஆஸ்திரேலிய பேட்டிங்கிற்கு புத்துயிர் ஊட்டினார். இதனடிப்படையில் தான் மார்னஸ் லபுஷேனின் கால்கள் நகர்ந்தன, கண்பார்வை பந்தின் லைனுக்கு வந்தது, கைகள் சுறுசுறுப்பாக இயங்க 72 ரன்களை எடுத்தார்.
பிட்ச்சில் நேற்று முதல் நாள் வரை இருந்த 12 மி.மீ உயரப் புற்கள் நேற்று மதியம் வாக்கில் 6 மி.மீ உயரப் புல்லாகக் குறைக்கப்பட முயற்சி செய்து வீசினால் நல்ல பந்து அதே போல் நின்று ஆடினால் பெரிய ஸ்கோரை எடுக்கலாம் என்ற ரக பிட்ச் ஆனது. இதில் டாஸ் வென்று கம்மின்ஸ் பேட் செய்யப்போவதாக முடிவெடுத்த உடனேயே நமக்குப் புரிந்தது ஆஸ்திரேலியா அவ்வளவு சுலபத்தில் மடியாது என்று.
ஆனால், முதல் நாள் ஆட்டத்தில் பேச்சு என்னவாக மாறிப்போனது எனில் 19 வயது வீரர் வந்து புலி போல் பும்ராவை எதிர்கொள்கிறார் என்பது பாராட்டுக்குரியது. ஆனால் விராட் கோலிக்கு அது பிடிக்கவில்லை. 10-வது ஓவர் முடிந்தவுடன் பீல்டர்கள் இடம் மாறுகையில் கான்ஸ்டாஸ் தன் பாட்டுக்குப் போகையில் விராட் கோலி அவர் மீது தோள்பட்டையைக் கொண்டு இடித்தார். இது நிச்சயம் விளையாட்டு உணர்வுக்கு எதிரானதே.
உடனே இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே நடுவர் மைக்கேல் காஃப் மற்றும் மற்றொரு ஓப்பனர் உஸ்மான் கவாஜாவும் வந்து சமாதான முயற்சியில் ஈடுபட்டனர். ரீப்ளேயில் கோலி தான் இந்தச் செயலுக்குக் காரணம், வேண்டுமென்றே தான் போய் அவரை இடித்தார் என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிந்தது.
வேண்டுமென்றே கோலி தான் கான்ஸ்டாஸை இடித்தார் என்பதை ரிக்கி பாண்டிங்கும் வர்ணனையில் தெரிவித்தார். முன்னாள் ஐசிசி நடுவர் சைமன் டாஃபல், கோலி தன் பாதையை மாற்றி கான்ஸ்டாஸை இடித்தது ‘முறையற்ற உடல் மோதல்’ என்ற விதத்தில் ஐசிசி நடத்தை விதிமீறல் என்றார்.
எதிரணி வீரர்களுடன் மோதல் போக்கைக் கடைப்பிடிப்பது விராட் கோலிக்கு முதல் முறையல்ல. அவர் அது பற்றி வருத்தம் தெரிவிப்பவரும் அல்ல. பார்ட் ஆஃப் கேம் என்று போய்க் கொண்டே இருப்பார். ஆனால் இது புகாருக்குரியதா, தண்டனைக்குரியதா என்பதை ஆஸ்திரேலியர்கள் புகார் அளித்தால் தான் தெரியும்.
ஆனால், முதலில் டி20 ரக பேட்டிங்கில் திட்டமிடாமல் இருந்ததால் அடி வாங்கிய பும்ரா பிறகு வந்து ஆட்டிப்படைத்து உஸ்மான் கவாஜா, ட்ராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ் ஆகியோர் விக்கெட்டுகளைத் தட்டிச் செல்ல, ஜடேஜா கான்ஸ்டாஸை எல்.பி.செய்ய, வாஷிங்டன் சுந்தர் லபுஷேனை பெவிலியன் அனுப்ப தற்போது ஸ்மித் அரைசதம் தாண்டி விளையாடி வருகிறார். பும்ராவை ஒன்றும் செய்ய முடியாது என்பதை அவரும் தன் இரண்டாவது ஆக்ரோஷ ஸ்பெல்லில் நிரூபித்துள்ளார்.