சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர்: இந்தியா பங்கேற்கும் ஆட்டங்கள் பாகிஸ்தானில் நடைபெறாது - ஐசிசி அறிவிப்பு


கோப்புப்படம்

துபாய்: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் 2025-ம் ஆண்டு பிப்ரவரியில் பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், நியூஸிலாந்து, ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய 8 அணிகள் பங்கேற்க உள்ளன. ஆனால் பாதுகாப்பு காரணங்களை கருதி இந்திய அணி, பாகிஸ்தான் சென்று விளையாடது என பிசிசிஐ திட்டவட்டமாக தெரிவித்தது.

மேலும் இந்திய அணி பங்கேற்கும் ஆட்டங்களை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த வேண்டும் எனவும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு (ஐசிசி), பிசிசிஐ தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த ஹைபிரிட் மாடலுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இசைவு தெரிவிக்க மறுத்தது. பலமுறை ஐசிசி பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தனது நிலையில் இருந்து இறங்கிவர மறுத்தது. இதனால் போட்டி அட்டவணை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது.

இதற்கிடையே போட்டி தொடங்குவதற்கு 100 நாட்களுக்கு முன்னர் தொடரின் அட்டவணையை வெளியிட வேண்டும் என்ற விதி உள்ளதால் ஒளிபரப்பாளர்கள் தரப்பில் இருந்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஒரு திட்டத்தை முன்வைத்தது.

இதன்படி வரும் 2027-ம் ஆண்டு வரை நடைபெறும் ஐசிசி தொடர்களை இந்தியா நடத்தினாலும் சரி, பாகிஸ்தான் நடத்தினாலும் சரி, இரு அணிகள் மோதும் ஆட்டங்களை ஹைபிரிட் மாடலில் பொதுவான இடத்திலேயே நடத்த வேண்டும். பாகிஸ்தான் அணியும் இந்தியா சென்று விளையாடாது என தெரிவிக்கப்பட்டது. இதை தற்போது ஐசிசி ஏற்றுக்கொண்டுள்ளது.

இதுதொடர்பாக ஐசிசி வெளியிட்டுள்ள அறிக்கையில், “2024 முதல் 2027 வரையிலான தற்போதைய சுழற்சியில் இந்தியா அல்லது பாகிஸ்தானில் நடத்தப்படும் ஐசிசி தொடர்களில் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான அனைத்து போட்டிகளும் போட்டி நடத்தும் உரிமையை கொண்டுள்ள நாடு முன்மொழியப்பட்ட நடுநிலையான மைதானத்தில் விளையாடுவதற்கு ஐசிசி ஒப்புதல் அளித்துள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா விளையாடும் போட்டிகள் பாகிஸ்தானில் நடத்தப்படாது. அநேகமாக இந்தத் தொடரில் இந்திய அணி பங்கேற்கும் ஆட்டங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படக்கூடும். அடுத்த ஆண்டு இந்தியாவில் ஐசிசி மகளிர் உலகக் கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இதைத் தொடர்ந்து 2026-ம் ஆண்டு ஆடவருக்கான டி 20 உலகக் கோப்பை தொடரை இந்தியா, இலங்கை இணைந்து நடத்த உள்ளது. இந்த இரு தொடர்களும் ஐசிசி-யின் அறிக்கையின்படி ஹைபிரிட் மாடலில் நடத்தப்படும் என கூறப்படுகிறது.

சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான சிக்கல் முடிவடைந்துள்ளதை தொடர்ந்து போட்டி அட்டவணையை விரைவில் வெளியிட ஐசிசி முடிவு செய்துள்ளது.

x