டிராவில் முடிந்தது 3-வது டெஸ்ட் போட்டி


பிரிஸ்பன்: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பனில் உள்ள காபா மைதானத்தில் நடைபெற்றது. இதன் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 445 ரன்கள் குவித்தது டிராவிஸ் ஹெட் 152 ரன்களையும், ஸ்டீவ் ஸ்மித் 101 ரன்களும் விளாசினர். இதையடுத்து விளையாடிய இந்திய அணி 3-வது நாள் ஆட்டத்தில் 74.5 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 252 ரன்கள் எடுத்தது.

கே.எல்.ராகுல் (84), ரவீந்திர ஜடேஜா (77) ஆகியோரது சிறப்பான ஆட்டத்தாலும் பின்வரிசையில் ஜஸ்பிரீத் பும்ரா, ஆகாஷ் தீப் ஆகியோரது பொறுப்பான ஆட்டத்தாலும் இந்திய அணி பாலோ-ஆன் ஆவதில் இருந்து தப்பித்தது. இந்நிலையில் நேற்று கடைசி நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 78.5 ஓவர்களில் 260 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆகாஷ் தீப் 44 பந்துகளில், ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 31 ரன்கள் எடுத்த நிலையில் டிராவிஸ் ஹெட் பந்தில் ஸ்டெம்பிங் ஆனார். பும்ரா 10 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

185 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய ஆஸ்திரேலிய அணி 18 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 89 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. நேதன் மெக்ஸ்வீனி 4, உஸ்மான் கவாஜா 8, மார்னஷ் லபுஷேன் 1, மிட்செல் மார்ஷ் 2, டிராவிஸ் ஹெட் 17, ஸ்டீவ் ஸ்மித் 4, பாட் கம்மின்ஸ் 22 ரன்களில் ஆட்டமிழந்தனர். அலெக்ஸ் கேரி 22, மிட்செல் ஸ்டார்க் 2 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய அணி சார்பில் பும்ரா 3 விக்கெட்களை வீழ்த்தினார். முகமது சிராஜ், ஆகாஷ் தீப் ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர்.

இதன் பின்னர் 275 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இந்திய அணி 2.1 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 8ரன்கள் எடுத்த நிலையில் மழை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4, கே.எல்.ராகுல் 4 ரன்களுடன் களத்தில் இருந்தனர். தொடர்ந்து மழை பெய்ததால் போட்டியை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் போட்டி டிராவில் முடிவடைந்தது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. 4-வது டெஸ்ட் போட்டி வரும் 26-ம் தேதி மெல்பர்ன் நகரில் தொடங்குகிறது

x