ரீசா ஹென்ட்ரிக்ஸ் சதம் விளாசல்: டி20 தொடரை வென்றது தென் ஆப்பிரிக்க அணி


செஞ்சுரியன்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான 2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் ரீசா ஹென்ட்ரிக்ஸ் விளாசிய சதம் காரணமாக 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது தென் ஆப்பிரிக்க அணி. இந்த வெற்றியால் தென் ஆப்பிரிக்க அணி டி20 கிரிக்கெட் தொடரை 2-0 என கைப்பற்றியது.

செஞ்சுரியன் நகரில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற 2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 5 விக்கெட்கள் இழப்புக்கு 206 ரன்கள் குவித்தது. சயிம் அயூப் 57 பந்துகளில், 11 பவுண்டரிகள், 5 சிக்ஸர்களுடன் 98 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார். பாபர் அஸம் 31. இர்பான் கான் 30, கேப்டன் முகமது ரிஸ்வான் 11, அப்பாஸ் அப்ரிடி 11 ரன்கள் சேர்த்தனர். தயான் கலீம், ஒட்நீல் பார்ட்மன் ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

இதையடுத்து 207 ரன்கள் இலக்குடன் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி 19.3 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 210 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. தனது முதல் சதத்தை விளாசிய ரீசா ஹென்ட்ரிக்ஸ் 63 பந்துகளில், 10 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 117 ரன்கள் எடுத்த நிலையில் அப்பாஸ் அப்ரிடி பந்தில் ஆட்டமிழந்தார். ரேயன் ரிக்கெல்டன் 2, மத்தேயு பிரீட்ஸ்கே 12 ரன்களில் நடையை கட்டினர். ராஸி வான் டெர் டஸ்ஸன் 38 பந்துகளில் 66 ரன்களும், கேப்டன் ஹென்ரிச் கிளாசன் 8 ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்க அணி 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 கிரிக்கெட் தொடரை 2-0 என தன்வசப்படுத்தியது. முதல் டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. 2 வருடங்களுக்குப் பிறகு தற்போதுதான் தென் ஆப்பிரிக்க அணி இருதரப்பு டி20 தொடரை கைப்பற்றுகிறது. கடைசியாக அந்த அணி 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் டி20 தொடரை வென்றிருந்தது.

x