டர்பன்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது தென் ஆப்பிரிக்க அணி. ஆல்ரவுண்டராக ஜார்ஜ் லிண்டே சிறப்பான செயல் திறனை வெளிப்படுத்தினார்.
டர்பனில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 183 ரன்கள் குவித்தது. டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களான ரீசா ஹெண்ட்ரிக்ஸ் 8, ராஸி வான் டெர் டஸ்ஸன் 0, மேத்யூ பிரீட்ஸ்கே 8 ரன்களில் நடையை கட்டினர். இவர்களைத் தொடர்ந்து கேப்டன் ஹன்ரிச் கிளாசன் 12 டோனோவன் பெரேரைரா 7 ரன்கள் ஆட்டமிழந்தனர். எனினும் டேவிட் மில்லர் 40 பந்துகளில், 8 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 82 ரன்ளும், சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான ஜார்ஜ் லிண்டே 24 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 48 ரன்களும் விளாசி அசத்தினர்.
இதனால் தென் ஆப்பிரிக்க அணி வலுவான இலக்கை கொடுத்தது. பாகிஸ்தான் அணி தரப்பில் ஷாகீன் ஷா அப்ரிடி, அப்ரார் அகமது ஆகியோர் தலா 3 விக்கெட்களையும், அப்பாஸ் அப்ரிடி 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். 184 ரன்கள் இலக்குடன் பேட் செய்த பாகிஸ்தான் அணியால் 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 172 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அதிகபட்சமாக கேப்டன் முகமது ரிஸ்வான் 62 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 74 ரன்கள் சேர்த்தார். சையும் அயூப் 31, தயப் தகிர் 18 ரன்கள் எடுத்தனர்.
ரிஸ்வானின் மந்தமான பேட்டிங் அந்த அணி தோல்வியடைய முக்கிய காரணமாக அமைந்தது. 62 பந்துகளை எதிர்கொண்ட அவர், கடைசி ஓவரின் 2 பந்துகள் வரை களத்தில் நின்ற போதும் பெரிய அளவிலான தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபடவில்லை. இது ஒருபுறம் இருக்க தென் ஆப்பிரிக்க அணியின் மட்டை வீச்சில் இறுதிக்கட்த்தில் அசத்திய ஜார்ஜ் லிண்டே பந்து வீச்சிலும் அசத்தினார். அவர், வீசிய 18-வது ஓவரில் ஷாகீன் அப்ரிடி (9), இர்பான் கான் (1), அப்பாஸ் அப்ரிடி (0) ஆகியோரை ஆட்டமிழக்கச் செய்து பாகிஸ்தான் அணிக்கு நெருக்கடி அளித்தார்.
க்வெனா மபகா வீசிய கடைசி ஓவரில் பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு 11 ரன்கள் தேவையாக இருந்த நிலையில் 7 ரன்கள் மட்டுமே சேர்க்கப்பட்டது. ஆட்ட நாயகனாக ஜார்ஜ் லிண்டே தேர்வானார். 11 ரன்கள வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்க அணி 3 ஆட்டங்கள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. 2-வது ஆட்டம் நாளை (13-ம் தேதி) செஞ்சுரியன் நகரில் நடைபெறுகிறது.