பாஸ்ஸெட்டேர்: வங்கதேச அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மேற்கு இந்தியத் தீவுகள் அணி ஒருநாள் போட்டித் தொடரை 2-0 என கைப்பற்றியது. வங்கதேச அணிக்கு எதிராக 10 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போதுதான் ஒருநாள் தொடரை மேற்கு இந்தியத் தீவுகள் வென்றுள்ளது.
பாஸ்ஸெட்டேர் நகரில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட் செய்த வங்கதேச அணி 45.5 ஓவர்களில் 227 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக மஹ்மதுல்லா 62, தன்ஸித் ஹசன் 46, தன்ஸிம் ஹசன் ஷகிப் 45 ரன்கள் சேர்த்தனர். மேற்கு இந்தியத் தீவுகள் அணி சார்பில் ஜெய்டன் சீல்ஸ் 4, குடகேஷ் மோதி 2 விக்கெட்களை வீழ்த்தினர்.
228 ரன்கள் இலக்குடன் பேட் செய்த மேற்கு இந்தியத் தீவுகள் அணி 36.5 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 230 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. தொடக்க வீரரான பிரண்டன் சிங் 76 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 82 ரன்கள் விளாசினார். எவின் லீவிஸ் 49, கீசி கார்ட்டி 45 ரன்கள் சேர்த்தனர். 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மேற்கு இந்தியத் தீவுகள் 3 ஆட்டங்கள் ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரை 2-0 கைப்பற்றியது.
வங்கதேச அணிக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரை மேற்கு இந்தியத் தீவுகள் அணி 10 வருடங்களுக்குப் பிறகு தற்போதுதான் வென்றுள்ளது. கடைசியாக அந்த அணி கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற தொடரை வென்றிருந்தது. இரு அணிகள் இடையிலான கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது.