ஆரோவில்லில் பிப்.16-ல் மாரத்தான் - முன்பதிவு தொடக்கம்


கோப்புப்படம்

புதுச்சேரி: ஆரோவில் மாரத்தான் போட்டி வரும் பிப்ரவரி 16-ம் தேதி நடக்கிறது. இதில் பங்கேற்பதற்கான முன்பதிவு தொடங்கி உள்ளது. இதற்காக வரும் ஜனவரி 25 வரை முன்பதிவு செய்யலாம்.

புதுச்சேரியில் உள்ள ஆரோவில்-ல் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் பிப்ரவரி 2-வது ஞாயிற்றுக்கிழமையில் மாரத்தான் ஓட்டம் நடக்கும் மக்கள் ஒற்றுமை, உடல் வலிமை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றை வலியுறுத்தி நடந்தப்படும் இந்த மாரத்தான் ஓட்டம் 42 கி.மீ., 21 கி.மீ., 10 கி.மீ. என 3 பிரிவுகளாக நடத்தப்படுகிறது. இதில் பல்வேறு மாநிலங்கள், வெளிநாட்டவர்கள், பிரபலமானவர்கள் பங்கேற்கின்றனர்.

இந்த மாரத்தான் போட்டியில் முன்பதிவு செய்தோர் மட்டுமே பங்கேற்கமுடியும். வரும் பிப்ரவரியில் நடக்க இருக்கும் மாரத்தான் போட்டிக்கான முன்பதிவு தற்போது ஆரோவில் மாரத்தான் இணையத்தில் தொடங்கியுள்ளது.

வரும் ஜனவரி 25ம் தேதி பகல் 12 மணிவரை போட்டியில் பங்கேற்க முன்பதிவு செய்யலாம். இம்முறை போட்டி வரும் பிப்ரவரி 16-ம் தேதி நடக்கிறது என்று ஆரோவில் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

x