கோலி முதல் ரோஹித் வரை: இந்திய டெஸ்ட் அணி சொதப்பலுக்கு காரணம் யார்?


இந்திய அணிக்கும் ஆஸ்திரேலிய அணிக்கும் இடையிலான ‘பார்டர் - கவாஸ்கர் டிராபி’ டெஸ்ட் தொடர் எப்போதுமே இரு அணிகளுக்கு மட்டுமல்ல... உலக அளவிலான டெஸ்ட் கிரிக்கெட் ரசிகர்களுக்கும் ரொம்பவே ஸ்பெஷலான ஒன்று. இந்த மகா டெஸ்ட் கிரிக்கெட் யுத்தத்தில் வெல்லப்போவது யார் என்கிற ஆர்வம் கூர்ந்து கவனிக்கப்படும்.

‘பெர்த்’தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி இருநூற்று தொண்ணூற்றைந்து ரன்கள் வித்தியாசத்தில் மகத்தான வெற்றி பெற்று இந்திய ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தது. ஆனால், அடிலெய்டு களத்தில் நடந்து முடிந்த இரண்டாவது டெஸ்ட் போட்டி, துன்ப அதிர்ச்சி ஆகிவிட்டது. ஆம், இந்தியாவுக்கு எதிரான இந்த இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி பத்து விக்கெட் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றி பெற்றது.

இரண்டாவது போட்டியில் இந்தியா படுதோல்வி அடைவதற்குக் பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் சொதப்பியதே காரணம். குறிப்பாக, பேட்டிங் சொதப்பல்தான் இந்தத் தோல்விக்கு வித்திட்டது எனலாம். பும்ரா தலைமையில் முதல் போட்டியில் களமிறங்கிய இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸ்சில் வெறும் நூற்றைம்பது ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதேநேரம், இரண்டாவது இன்னிங்ஸ்சில் கம்பேக் கொடுத்து, நானூற்று என்பத்தியேழு ரன்கள் குவித்து, ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி தந்தது இந்திய அணி. ஆனால், அடிலெய்டில் நடைபெற்ற டே-நைட் டெஸ்ட் மேட்ச்சில் அத்தகைய மாயத்தையோ, தாக்கத்தையோ இந்திய அணியின் பேட்ஸ்மேன்களால் தர முடியவில்லை.

அடிலெய்டு டெஸ்டில், கிடைத்த வாய்ப்புகளை கேபிடலைஸ் செய்யத் தவறியதாக இந்திய கேப்டன் ரோஹித் சர்மாவே ஒப்புக்கொண்டார். ஆஸ்திரேலியாவில், இந்தத் தொடரில் இதுவரை நான்கு இன்னிங்சில் இந்தியா ஆடியுள்ளது. இதில் பெர்த் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸை விட்டு விடலாம். எஞ்சி இருக்கும் மூன்று இன்னிங்ஸில் இந்திய பேட்ஸ்மேன்கள் டெஸ்ட் கிரிக்கெட்டின் ‘டிஃபென்ஸ் மோடு’ பேட்டிங் பாணியை பின்பற்றவில்லை. அதுவே, அணியின் வீழ்ச்சிக்கு முக்கியக் காரணமானது.

எதிரணி பவுலர்கள் வீசுகிற பந்துகள் அனைத்தையுமே விளாச நினைத்து, தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தார்கள். அதுவும் கோலியை ஆஃப் ஸ்டெம்ப்புக்கு வெளியில் கட்டம் கட்டி தூக்கியுள்ளனர், ஆஸ்திரேலிய பவுலர்கள்! திராவிட் பயிற்சியாளராக இருந்தபோது தென் ஆப்பிரிக்காவில் கோலியை ஆஃப் ஸ்டெம்ப் பந்துகளை தொடாமல் ஆடச் செய்தார். ஆனால், தற்போதைய பயிற்சியாளரான கம்பீரால், கோலியை ஒன்றும் செய்ய முடியவில்லை போல.

2003, 2004 பயணத்தில் சச்சின் டெண்டுல்கர் சிட்னி போட்டியில் ஆடிய ஆட்டத்தை போலவே இனி கோலியும் ஆட வேண்டும் என ஆடம் கில்கிறிஸ்ட் அட்வைஸ் கொடுத்துள்ளார். அதேபோல், ரோஹித் சர்மா மீண்டும் ஓப்பனராக ஆட வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர்களான சுனில் கவாஸ்கரும், ரவி சாஸ்திரியும் யோசனை சொல்கின்றனர்.

குறிப்பாக, அடிலெய்டு போட்டியில் தோல்விக்கான காரணமாக ரோஹித் சர்மாவின் கேப்டன்சி குறைபாடுகளும் மிக முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது. முதல் போட்டியில் அவர் இல்லாத வேளையில், பும்ரா அணியை அபாரமாக வழிநடத்தி இருந்தார். இந்தியாவுக்கு அது மாதிரியான கேப்டன்சிதான் எதிர்வரும் போட்டிகளில் தேவை என்ற கருத்துகளும் முன்வைக்கப்படுகின்றன.

பும்ராவின் கேப்டன்சியானது, ஆக்ரோஷமாக மட்டுமின்றி, கச்சிதமான கள வியூகங்களுடன் அட்டாக்கிங் ஆக இருந்தது. ஆனால், ரோஹித் சர்மாவோ பழைய மாதிரி கள வியூகத்தைத் தள்ளித் தள்ளி அமைப்பது, அணித் தேர்வில் தேவையில்லாத மாற்றங்களைச் செய்வது என தப்பும் தவறுமாக இருந்ததாக கிரிக்கெட் நிபுணர்கள் பட்டியலிடுகின்றனர்.

இன்னொரு பக்கம்... சீனியர் வீரர்களை விட்டுவிட்டு ரிஷப் பண்ட், கில், ஹர்ஷித் ராணா முதலானோர் சரியில்லை என்று கூறினால், அது மிக மிக அநீதியாகும் என்ற காட்டமான கருத்தும் முன்வைக்கப்படுகிறது. ஆஸ்திரேலிய பவுலர்கள் பிங்க் பந்தில் நிறைய ஆடுகின்றனர். இந்திய அணியோ ஜெய்ஷாவின் வருகைக்குப் பிறகு, பிங்க் பந்தை மறந்துவிட்டனர்.

இப்படி பல காரணங்கள் முன்வைக்கப்பட்டாலும், உண்மையில், இந்திய சீனியர் பேட்ஸ்மேன்களின் அணுகுமுறைதான் மிக மிக தவறு என்று அழுத்தமாகச் சுட்டிக்காட்டப்படுகிறது. அவர்கள் பின்பற்றும் உத்திகளும் சரியல்ல; அவர்கள் பொறுமை காக்காமல் அர்த்தமற்ற ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தி, ஆட்டத்தின் போக்கையே சொதப்பிவிடுகின்றனர் என்ற வாதமும் முன்வைக்கப் படுகிறது.

இப்போதைக்கு ரோஹித் சர்மா, விராட் கோலி தயாராகி, ஒழுங்காக பாரம்பரிய டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாடி, ஆஸ்திரேலியா பவுலர்களை களத்தில் களைப்படையச் செய்வதுதான் ஒரே வழியாக இருக்கிறது. இந்திய அணியின் சீனியர் பேட்ஸ்மேன்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் தங்களது அனுபவத்தை வெளிப்படுத்த வேண்டிய நேரமாக இது உள்ளது. அப்போதுதான் 2018 மற்றும் 2020 சுற்றுப்பயணம் போல இந்திய அணியால் ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வெல்ல முடியும்.

x