சிங்கப்பூர்: உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரெனுடன், இந்திய கிராண்ட் மாஸ்டரான குகேஷ் மோதி வருகிறார். 14 சுற்றுகளை கொண்ட இந்த போட்டியில் முதல் சுற்றில் டிங் லிரென் வெற்றி பெற்றிருந்தார். 2-வது சுற்று டிராவில் முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற 3-வது சுற்றில் குகேஷ் வெற்றி பெற்றார்.
இதன் பின்னர் நடைபெற்ற அடுத்த 3 சுற்றுகளும் டிராவில் முடிவடைந்தன. இந்நிலையில் ஒருநாள் ஓய்வுக்குப் பின்னர் நேற்று 7-வது சுற்று ஆட்டத்தில் டிங் லிரென், குகேஷ் பலப்பரீட்சை நடத்தினர். இதில் லிரென் கருப்பு காய்களுடனும், குகேஷ் வெள்ளை காய்களுடன் களமிறங்கினர். 5 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற இந்த ஆட்டம் 72-வது நகர்த்தலின் போது டிராவில் முடிவடைந்தது.
இதன் மூலம் இருவருக்கும் தலா 0.5 புள்ளிகள் வழங்கப்பட்டது. 7 சுற்றுகளின் முடிவில் டிங் லிரென், குகேஷ் ஆகியோர் தலா 3.5 புள்ளிகளை பெற்று சமநிலையில் உள்ளனர். இன்று 8-வது சுற்று ஆட்டம் நடைபெறுகிறது.