டிச.22-ல் பி.வி.சிந்துவுக்கு திருமணம்


ஹைதராபாத்: இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்றுள்ள இந்தியாவின் பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு வரும் 22-ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. ஹைதராபாத்தை சேர்ந்த வெங்கட தத்தா சாய் என்பவரை சிந்து திருமணம் செய்து கொள்ள உள்ளார். அவர் போசிடெக்ஸ் டெக்னாலஜிஸ் என்ற நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக உள்ளார். திருமணம் உதய்பூரில் நடைபெறும் என உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை சிந்துவின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

திருமண வரவேற்பு நிகழ்வு 24-ம் தேதி அன்று ஹைதராபாத்தில் நடைபெறுகிறது. அண்மையில் சையது மோடி சர்வதேச ஓபன் தொடரில் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார் சிந்து. 2 வருடங்களுக்குப் பிறகு அவர், வென்ற பட்டமாக இது அமைந்திருந்தது.

29 வயதான பி.வி.சிந்து, ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளியும், டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கமும் வென்றுள்ளார். 2019-ல் உலக சாம்பியன்ஷிப் தொடரில் ஒற்றையர் பிரிவில் பட்டம் வென்றுள்ளார். காமன்வெல்த், ஆசிய போட்டிகள், ஆசிய சாம்பியன்ஷிப்பிலும் பல பட்டங்கள் வென்றுள்ளார்

x