புவனேஷ்வர் குமாரை ரூ.10.75 கோடிக்கு ஏலம் எடுத்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு


ஜெட்டா: 2025-ம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் நேற்று 2-வது நாளாக சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் நடைபெற்றது. இதில் இந்திய வேகப்பந்து வீச்சாரளான புவனேஷ்வர் குமாரை ரூ.10.75 கோடிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வாங்கியது.

மற்றொரு இந்திய வேகப்பந்து வீச்சாளரான முகேஷ் குமாரை ஆர்டிஎம் முறையில் டெல்லி கேபிடல்ஸ் ரூ.8 கோடிக்கு தங்க வைத்துக் கொண்டது. கடந்த சீசன்களில் சிஎஸ்கே அணிக்காக விளையாடிய வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹரை ரூ.9.25 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் வாங்கியது.

ஆகாஷ் தீப்பை ரூ.8 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஏலம் எடுத்தது. மேற்கு இந்தியத் தீவுகள் ரோவ்மேன் பவலை ரூ.1.50 கோடிக்கு கொல்கத்தா அணி வாங்கியது. தென் ஆப்பிரிக்காவின் டூ பிளெஸ்ஸிஸ்ஸை டெல்லி கேபிடல்ஸ் ரூ.2 கோடிக்கும், வாஷிங்டன் சுந்தரை ரூ.3.20 கோடிக்கு குஜராத் டைட்டன்ஸும் வாங்கின. கடந்த சீசனில் பஞ்சாப் அணியின் கேப்டனாக செயல்பட்ட இங்கிலாந்து ஆல்ரவுண்டரான சேம் கரணை ரூ.2.40 கோடிக்கு சிஎஸ்கே ஏலம் எடுத்தது.

தென் ஆப்பிரிக்காவின் மார்கோ யான்சனை பஞ்சாப் கிங்ஸ் ரூ.7 கோடிக்கு வாங்கியது. கடந்த சீசனில் லக்னோ அணிக்காக விளையாடிய கிருணல் பாண்டியாவை ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு ரூ.5.75 கோடிக்கு வாங்கியது. ஆல்ரவுண்டர் அன்ஷுல் கம்போஜை ரூ.3.40 கோடிக்கும், பேட்ஸ்மேன் ராகுல் திரிபாதியை ரூ.3.40 கோடிக்கும், சுழற்பந்து வீச்சாளர் குர்ஜப்னீத் சிங்கை ரூ.2.20 கோடிக்கும், பேட்ஸ்மேன் ஷாயிக் ரஷீத்தை ரூ.30 லட்சத்துக்கும், வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் சவுத்ரியை ரூ.30 லட்சத்துக்கும் ஏலம் எடுத்தது சிஎஸ்கே அணி.

13 வயதான வைபவ் சூர்யவன்ஷியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரூ.1.10 கோடிக்கு ஏலம் எடுத்தது. பிஹாரை சேர்ந்த இடது கை பேட்ஸ்மேனான சூர்யவன்ஷி சமீபத்தில் சென்னையில் இளம் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 62 பந்துகளில் 104 ரன்கள் விளாசியிருந்தார்.

x