பெர்த் டெஸ்டில் வலுவான நிலையில் இந்திய அணி!


பெர்த்: இந்திய அணிக்கெதிரான முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 3 விக்கெட்களை இழந்து தடுமாறி வருகிறது. முன்னதாக 2-வது இன்னிங்ஸில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி ஆகியோரின் சதத்தால் இந்திய அணி 487 ரன்கள் குவித்தது.

இந்தியா, ஆஸ்திரேலிய அணிகளிடையிலான இந்த டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் கடந்த 22-ம் தேதி தொடங்கியது. முதல் இன்னிங்ஸில் இந்தியா 150 ரன்களும், ஆஸ்திரேலியா 104 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தன.

இந்நிலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற 2-ம் நாள் ஆட்டத்தின் முடிவில் இந்தியா 2-வது இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 172 ரன்கள் எடுத்திருந்தது.

இதைத் தொடர்ந்து நேற்று 3-ம் நாள் ஆட்டத்தை ராகுல் 62 ரன்களுடனும், ஜெய்ஸ்வால் 90 ரன்களுடனும் தொடங்கினர்.

தொடர்ந்து அபாரமாக விளையாடிய ஜெய்ஸ்வால் சதம் விளாசி அசத்தினார். மறுமுனையில் ராகுல் 77 ரன்கள் எடுத்த நிலையில் வீழ்ந்தார். படிக்கல் 25, ரிஷ் பந்த் 1, துருவ் ஜுரெல் 1, வாஷிங்டன் சுந்தர் 29 ரன்கள் எடுத்து வீழ்ந்தனர். ஜெய்ஸ்வால் 161 ரன்கள் (3 சிக்ஸர், 15 பவுண்டரி) குவித்து,மார்ஷ் பந்தில் வீழ்ந்தார்.

ஆனால் ஒரு முனையில் நட்சத்திர வீரர் விராட் கோலி அபாரமாக விளையாடி சதம் விளாசினார். விராட் கோலி சதம் விளாசியதும் ஆட்டத்தை டிக்ளேர் செய்வதாக இந்திய அணியின் கேப்டன் பும்ரா அறிவித்தார். இந்திய அணி அப்போது 6 விக்கெட் இழப்புக்கு 487 ரன்கள் எடுத்திருந்தது. கோலி 100 ரன்களும், நித்திஷ் ரெட்டி 38 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

ஆஸி. அணி தரப்பில் நேதன் லயன் 2, ஸ்டார்க், ஹேசில்வுட், கம்மின்ஸ், மார்ஷ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து 534 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் ஆஸ்திரேலிய அணி விளையாடத் தொடங்கியது. ஆனால் முதல் ஓவரிலேயே நேதன் மெக்ஸ்வீனியை எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழக்கச் செய்தார் பும்ரா. இதையடுத்து கேப்டன் கம்மின்ஸ் களமிறங்கினார். சிராஜ் வீசிய பந்தை தடுத்தாட முயன்ற கம்மின்ஸ், விராட் கோலியிடம் பிடிகொடுத்து வெளியேறினார். 5-வது ஓவரை வீசிய பும்ரா, அந்த ஓவரின் 2-வது பந்தில் மார்னஸ் லபுஷேனை, எல்பிடபிள்யூ முறையில் வெளியேற்றினார். இதையடுத்து 3-ம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. உஸ்மான் கவாஜா 3 ரன்களுடன் களத்தில் உள்ளார். ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் இழப்புக்கு 12 ரன்கள் என்ற மோசமான நிலையில் உள்ளது. வெற்றிக்கு இன்னும் 522 ரன்கள் தேவை என்ற நிலையில் ஆஸ்திரேலிய அணி இன்று 4-ம் நாள் ஆட்டத்தை எதிர்கொள்கிறது.

81-வது சதம்: இந்தப் போட்டியில் விராட் கோலி விளாசிய சதம் சர்வதேச போட்டிகளில் அவரது 81-வது சதமாக அமைந்தது. டெஸ்ட் போட்டிகளில் 30 சதமும், ஒருநாள் போட்டிகளில் 50 சதமும், சர்வதேச டி20 போட்டியில் ஒரு சதமும் விராட் கோலி விளாசியுள்ளார். மேலும் ஆஸ்திரேலியாவில் அதிக டெஸ்ட் சதம் விளாசிய இந்திய வீரர் வரிசையில் அவர் முதலிடத்தைப் பிடித்துள்ளார். இதுவரை அவர் 7 சதம் விளாசியுள்ளார். சச்சின் 6 சதங்களுடன் அடுத்த இடத்தில் உள்ளார்.

x