பெர்த் டெஸ்டின் முதல் நாளில் 17 விக்கெட்கள் சரிந்தன: இந்திய அணி 150 ரன்களுக்கு ஆட்டமிழப்பு


பெர்த்: ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 150 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 67 ரன்கள் எடுத்தது. புற்கள் நிறைந்த பவுன்ஸர் ஆடுகளத்தில் முதல் நாளில் மட்டும் 17 விக்கெட்கள் சரிந்தன.

பெர்த் நகரில் உள்ள ஆப்டஸ் மைதானத்தில் நேற்று தொடங்கிய இந்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஜஸ்பிரீத் பும்ரா பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் நித்திஷ் குமார் ரெட்டி, ஹர்ஷித் ராணா ஆகியோரும் ஆஸ்திரேலிய அணியில் நேதன் மெக்ஸ்வீனியும் அறிமுக வீரர்களாக களமிறங்கினர். பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல் தொடக்க வீரர்களாக களமிறங்கினார்கள்.

ஜெய்ஸ்வால் 8 பந்துகளை சந்தித்த நிலையில் ரன் ஏதும் எடுக்காமல் மிட்செல் ஸ்டார்க் பந்தை டிரைவ் செய்ய முயன்ற போது கல்லி திசையில் நின்ற நேதன் மெக்ஸ்வீனியிடம் கேட்ச் ஆனது. இதையடுத்து களமிறங்கிய தேவ்தத் படிக்கல் 23 பந்துகளை எதிர்கொண்டு ரன் ஏதும் எடுக்காத நிலையில் ஜோஷ் ஹேசில்வுட் பந்தில் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரியிடம் பிடிகொடுத்து நடையை கட்டினார்.

தொடர்ந்து விராட் கோலி 12 பந்துகளில் 5 ரன்கள் எடுத்த நிலையில் ஜோஷ் ஹேசில்வுட் ஆஃப் ஸ்டெம்புக்கு வெளியே எகிறி வந்த பந்தை அரை மனதுடன் தொட பந்து மட்டையில் பட்டு முதல் சிலிப் திசையில் நின்ற உஸ்மான் கவாஜா கைகளில் தஞ்சம் அடைந்தது. நிதானமாக விளையாடிய கே.எல்.ராகுல் 74 பந்துகளில், 3 பவுண்டரிகளுடன் 26 ரன்கள் எடுத்த நிலையில் மிட்செல் ஸ்டார்க் பந்தில், அலெக்ஸ் கேரியிடம் பிடிகொடுத்து வெளியேறினார்.

47 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்த நிலையில் களமிறங்கிய துருவ் ஜூரெல் 20 பந்துகளில், 2 பவுண்டரிகளுடன் 11 ரன்கள் எடுத்த நிலையில் மிட்செல் மார்ஷ் பந்தை மிட் ஆஃப் திசையை நோக்கியபடி தடுத்தாட முயன்றார். ஆனால் பந்து மட்டையில் பட்டு 2-வது சிலிப் திசையில் நின்ற மார்னஷ் லபுஷேனிடம் கேட்ச் ஆனது. இதன் பின்னர் களமிங்கிய வாஷிங்டன் சுந்தரையும் (4) வெளியேற்றினார் மிட்செல் மார்ஷ். 73 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்த நிலையில் ரிஷப் பந்த், நித்திஷ் குமார் ரெட்டி ஜோடி தாக்குதல் ஆட்டம் மேற்கொண்டது.

இதனால் இந்திய அணி 40-வது ஓவரில் 100 ரன்களை கடந்தது. பாட் கம்மின்ஸ் வீசிய 42-வது ஓவரின் கடைசி பந்தை ரிஷப் பந்த ஃபைன் லெக் திசையை நோக்கி ஸ்வீப் ஷாட்டில் சிக்ஸர் அடித்தார். அப்போது அவர், நிலைதடுமாறி கீழே விழுந்தார். மறுபுறம் நேதன் லயன் வீசிய பந்தில் நித்திஷ் குமார் ரெட்டி ரீவர்ஸ் ஸ்வீப்பில் பவுண்டரி அடித்தார். 8-வது விக்கெட்டுக்கு 48 ரன்கள் சேர்த்த இந்த ஜோடியை பாட் கம்மின்ஸ் பிரித்தார்.

ரிஷப் பந்த் 78 பந்துகளில், ஒரு சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 37 ரன்கள் எடுத்த நிலையில் பாட் கம்மின்ஸ் பந்தை லெக் திசையில் பிளிக் செய்ய முயன்ற போது சிலிப் திசையில் ஸ்மித்திடம் கேட்ச் ஆனது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய ஹர்ஷித் ராணா 7, ஜஸ்பிரீத் பும்ரா 8 ரன்களில் ஹேசில்வுட் பந்தில் ஆட்டமிழந்தனர். இதன் பின்னர் நித்திஷ் குமார் மட்டையை சுழற்றினார். பாட் கம்மின்ஸ் வீசிய 48-வது ஓவரின் 4-வது பந்தை தேர்டு மேன் திசையை நோக்கி நித்திஷ் குமார் சிக்ஸர் விளாசினார்.

தொடர்ந்து பாட்கம்மின்ஸ் வீசிய அடுத்த ஓவரில் நித்திஷ் குமார் புல் ஷாட் விளையாட முயன்றார். ஆனால் பந்து மட்டை விளிம்பில் பட்டு மிட்விக்கெட் திசையில் உஸ்மான் கவாஜாவிடம் கேட்ச் ஆனது. முடிவில் இந்திய அணி 49.4 ஓவர்களில் 150 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. நித்திஷ் குமார் ரெட்டி 59 பந்தகளில், ஒரு சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 41 ரன்கள் சேர்த்தார். ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஜோஷ் ஹேசில்வுட் 4 விக்கெட்களை வீழ்த்தினார். மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ், மிட்செல் மார்ஷ் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.

இதையடுத்து பேட் செய்த ஆஸ்திரேலிய அணிக்கு ஜஸ்பிரீத் பும்ரா கடும் அச்சுறுத்தல் கொடுத்தார். நேதன் மெக்ஸ்வீனி 10 ரன்கள் எடுத்த நிலையில் பும்ரா பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். உஸ்மான் கவாஜா 8 ரன்களில் பும்ரா பந்தில் சிலிப் திசையில் நின்ற விராட் கோலியிடம் பிடிகொடுத்து நடையை கட்டினார். ஸ்டீவ் ஸ்மித் ரன் ஏதும் எடுக்காமல் பும்ரா பந்தில் எல்பிடபிள்யூ முறையில் நடையை கட்டினார்.

19 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்த நிலையில் களமிறங்கிய டிராவிஸ் ஹெட் ஹர்ஷித் ராணா வீசிய 10-வது ஓவரில் அடுத்தடுத்து பவுண்டரி விரட்டினார். ஆனால் ஹர்ஷித் ராணாவின் அடுத்த ஓவரில் டிராவிஸ் ஹெட் போல்டானார். 13 பந்துகளை சந்தித்த டிராவிஸ் ஹெட் 11 ரன்கள் சேர்த்தார். இதைத் தொடர்ந்து களமிறங்கிய மிட்செல் மார்ஷ் 6 ரன்களில் முகமது சிராஜ் வீசிய பந்தில் 3-வது சிலிப் திசையில் நின்ற கே.எல்.ராகுலின் அற்புதமான கேட்ச் காரணமாக நடையை கட்டினார்.

ரன்கள் சேர்க்க தடுமாறிய லபுஷேன் 52 பந்துகளில் 2 ரன்கள் எடுத்த நிலையில் சிராஜ் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். அவரைத் தொடர்ந்து பாட் கம்மின்ஸ் 3 ரன்களில் பும்ரா பந்தில் ரிஷப் பந்திடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் ஆஸ்திரேலிய அணி 27 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 67 ரன்கள் எடுத்தது. அலெக்ஸ் கேரி 19, மிட்செல் ஸ்டார்க் 6 ரன்களுடன் களத்தில் இருந்தனர். இந்திய அணி தரப்பில் பும்ரா 4, சிராஜ் 2, ஹர்ஷித் ராணா ஒரு விக்கெட் கைப்பற்றினர். கைவசம் 3 விக்கெட்கள் இருக்க 83 ரன்கள் பின்தங்கியுள்ள ஆஸ்திரேலிய அணி இன்று 2-வது நாள் ஆட்டத்தை சந்திக்கிறது.

72 வருடங்களுக்குப் பிறகு.. பெர்த் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் மட்டும் ஒட்டுமொத்தமாக 17 விக்கெட்கள் சரிந்தது. 1952-ம் ஆண்டுக்குப் பிறகு ஆஸ்திரேலிய ஆடுகளத்தில் ஒரே நாளில் அதிக விக்கெட்கள் வீழ்த்தப்படுவது இதுவே முதன்முறையாகும்.

31 ஆயிரம் ரசிகர்கள்: பெர்த் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தை காண்பதற்காக 31,302 ரசிகர்கள் மைதானத்துக்கு வந்திருந்தனர். இது சாதனையாக அமைந்தது. இதற்கு முன்னர் 2017-ம் ஆண்டு ஆஷஸ் டெஸ்ட் தொடரில் வாகா மைதானத்தில் நடைபெற்ற போட்டியை காண்பதற்கு 22,178 பேர் வருகை தந்ததே சாதனையாக இருந்தது. இது தற்போது முறியடிக்கப்பட்டுள்ளது.

தப்பித்த நித்திஷ் குமார்: நித்திஷ் குமார் ரெட்டி 10 ரன்களில் இருந்த போது மிட்செல் ஸ்டார்க் வீசிய 37-வது ஓவரின் 5-வது பந்தை எதிர்கொண்டார். அப்போது பந்து மட்டைக்கு நெருக்கமாக சென்று லெச் திசையில் விக்கெட் கீப்பரிடம் தஞ்சம் அடைந்தது. இதையடுத்து ஆஸ்திரேலிய அணி வீரர்கள் அப்பீல் செய்தனர். ஆனால் களநடுவர் அவுட் கொடுக்கவில்லை. இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய வீரர்கள் டிஆர்எஸ் எடுக்கலாமா? என ஆலோசித்தனர். மிட்செல் ஸ்டார்க் மேல்முறையீடு செல்வதில் உறுதியாக இருந்தார். ஆனால் அவருக்கு ஆதரவு இல்லை. இதனால் அப்படியே விட்டுவிட்டனர். ஆனால் டி.வி. ரீபிளேவில் பந்து கையுறையில் உரசிச் சென்றது தெரியவந்தது.

x