டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரின் கால் இறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் - நெதர்லாந்து அணிகள் மோதின. ஸ்பெயினின் மலாகா நகரில் நடைபெற்று வந்த இந்த ஆட்டத்தில் ஸ்பெயின் 2-1 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது.
இந்த மோதலில் ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் ஸ்பெயின் அணியின் நட்சத்திரமான ரபேல் நடால் 4-6, 4-6 என்ற நேர் செட் கணக்கில் நெதர்லாந்தின் போட்டிக் வான் டி ஸான்ட்ஸ்கல்பிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
இந்த ஆட்டத்துடன் அனைத்து வடிவிலான டென்னிஸ் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றார் ரபேல் நடால். கடந்த மாதமே டேவிஸ் கோப்பை தொடருடன் ஓய்வு பெறுவேன் என நடால் அறிவித்திருந்தார். களிமண் தரை ஆடுகளங்களில் நடத்தப்படும் பிரெஞ்சு ஓபன் தொடரில் நடால் 14 முறை சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார். இதன் காரணமாகவே அவர், ‘களிமண் தரை ஆடுகளத்தின் ராஜா’ என அழைக்கப்பட்டார்.
38 வயதான அவர், ஒட்டுமொத்தமாக 22 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்று குவித்துள்ளார். 20 ஆண்டுகளாக டென்னிஸ் உலகில் ஆதிக்கம் செலுத்தி வந்த ரபேல் நடால், தனது கடைசி ஆட்டத்துக்கு பின்னர் கண்ணீர் மல்க விடைபெற்றார். போட்டியை காண வந்திருந்த பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் ரபேல் நடால் பேசியதாவது:
நான் வென்ற பட்டங்களின் எண்ணிக்கையை மக்கள் அறிந்திருக்கலாம், ஆனால் மல்லோர்காவில் உள்ள ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்த ஒரு நல்ல மனிதராக நான் நினைவு கூரப்பட வேண்டும் என்றே விரும்புகிறேன். ஒரு குழந்தையாக எனது கனவை பின் தொடர்ந்து கடினமாக உழைத்தேன். நான் மிகவும் அதிர்ஷ்டசாலி. டேவிஸ் கோப்பையில் நான் எனது முதல் ஆட்டத்தில் தோல்வி அடைந்தேன். தற்போது கடைசி ஆட்டத்திலும் தோல்வி கண்டுள்ளேன். இதன் மூலம் எனது டென்னிஸ் வாழ்க்கை வட்டம் முழுமை பெற்றுள்ளது.
உண்மை என்னவென்றால், இந்த தருணம் வருவதற்கு யாரும் விரும்பமாட்டார்கள். நான் டென்னிஸ் விளையாடுவதில் சோர்வடையவில்லை, ஆனால் இதற்குமேல் விளையாட முடியாது என எனது உடல் சொல்லிவிட்டது. இந்த நிலைமையை ஏற்றுக்கொள்ள வேண்டும். எனது பொழுதுபோக்கிலிருந்து ஒரு வாழ்க்கையை உருவாக்க முடிந்ததற்கும், நான் கற்பனை செய்ததை விட நீண்ட காலம் விளையாடியதற்கும் நான் மிகவும் பாக்கியம் பெற்றவனாக உணர்கிறேன். இவ்வாறு ரபேல் நடால் கூறினார்.